ஜம்மு காஷ்மீரில் 2-ம் கட்ட தேர்தல்: நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
- தேர்தலில் மொத்தம் 239 பேர் களம் காண்கின்றனர்.
- 4 முக்கிய தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.
ஸ்ரீநகர்:
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இதில் கடந்த 18-ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட சட்டசபை தேர்தலில் 24 தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (25-ந்தேதி) 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 26 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 239 பேர் களம் காண்கின்றனர்.
2-ம் கட்ட தேர்தலில் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா, பாரதீய ஜனதா மாநில தலைவர் ரவீந்திர ரெய்னா மற்றும் அப்னி கட்சியின் அல்தாப் புகாரி ஆகிய 4 முக்கிய தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.
2-வது கட்ட தேர்தல் களத்தில் அதிகபட்சமாக ஸ்ரீநகர் மாவட்டத்தில் 93 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பட்காம் மாவட்டத்தில் 46 பேர், ரஜோரியில் 34 பேர், பூஞ்ச் மாவட்டத்தில் 25 பேர், கந்தெர்பால் மாவட்டத்தில் 21 பேர், ரேசி மாவட்டத்தில் 20 பேர் போட்டியிடுகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து மீட்கப்படும் வரை சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் முதல்-முந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் அவர் இந்த தேர்தலில் கந்தெர்பால் மற்றும் புட்ஹால் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இதில் கந்தெர்பால் தொகுதியில் அதிகபட்சமாக 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புட்ஹால் தொகுதியில் 4 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
அல்தாப் புஹாரி கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அப்னி கட்சியை தொடங்கினார். அவர் ஸ்ரீநகரில் உள்ள சனாபோரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கராவுக்கும் இந்த தேர்தல் முக்கியமானது. அவர் ஸ்ரீநகரில் உள்ள சென்ட்ரல் ஷால்டெங் தொகுதியில் போட்டியிடுகிறார்.