உக்ரைன் பயணம் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் பேசிய மோடி
- ஆகஸ்ட் 23 அன்று உக்ரைன் நாட்டுக்கு அரசுமுறை பயணமாக மோடி சென்றிருந்தார்.
- ரஷிய அதிபர் புதனுடன் பேசினேன் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்மையில், அரசு முறை பயணமாக பிரதமர் மோடி உக்ரைன் சென்றார். அங்கு, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்தித்தார். ரஷியா உடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், உக்ரைன் நாட்டு பயணம் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் பேசினேன் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "ரஷிய அதிபர் புதினுடன் பேசினேன். இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான கூட்டாண்மை மற்றும் பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம். ரஷியா -உக்ரைன் போர் பற்றிய எனது கருத்துகள் மற்றும் சமீபத்தில் நான் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டது குறித்து உரையாடினோம். போரை கைவிட்டு, அமைதியான தீர்வுக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தினேன்" என்று பதிவிட்டுள்ளார்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த ஜூலை 9 அன்று நடந்த 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி ரஷியா சென்றிருந்தார். அப்போது மோடியை புதின் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.