மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி: மோடி போட்ட 'கச்சத்தீவு' நாடகம் அம்பலம்- காங்கிரஸ்
- தமிழ்நாடு மக்கள் தெளிவாக பாஜகவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
- தேர்தலுக்காக நடத்தப்பட்ட கச்சத்தீவு நாடகத்துக்காக மோடியும் அவரின் கட்சியினரும் மன்னிப்பு கேட்பார்களா?
காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு கச்சதீவை தாரைவார்த்ததாக தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். அப்போது, கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்தது..
கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் போட்டியிட்ட அணைத்து இடங்களிலும் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், பாஜகவின் கட்சத்தீவு சர்ச்சை தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"பிரசாரத்துக்காக கச்சத்தீவு பிரச்சினையை மோடியும் அவரது கூட்டாளிகளும் உருவாக்கி தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவு திரட்ட முயன்றது நினைவில் இருக்கிறதா? நேற்று மோடியின் பதவியேற்பு நிகழ்வில் இலங்கையின் ஜனாதிபதியும் பங்கேற்றிருக்கிறார். தமிழ்நாடு மக்கள் தெளிவாக பாஜகவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள். தேர்தலுக்காக நடத்தப்பட்ட கச்சத்தீவு நாடகத்துக்காக மோடியும் அவரின் கட்சியினரும் மன்னிப்பு கேட்பார்களா?" என்று அவர் பதிவிட்டுள்ளார்.