இந்தியா
null

பாகிஸ்தான் நாடு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை- பிரதமர் மோடி

Published On 2024-07-26 06:41 GMT   |   Update On 2024-07-26 09:02 GMT
  • ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா துறை மேம்பாட்டு வருகிறது.
  • இந்தியா தரப்பில் 524 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

புதுடெல்லி:

காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியில் 1999-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி ஆக்கிரமித்தது. அப்போது பிரதமராக வாஜ்பாய் இருந்தார். அவர் 'ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் போர் நடத்தி கார்கில் பகுதியை மீட்க உத்தரவிட்டார்.

இதையடுத்து கார்கில் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் போர் நடந்தது. இந்த போரில் இந்தியா நடத்திய விமானப் படை தாக்குதலில் பாகிஸ்தான் படைகள் நிலை குலைந்து பின்வாங்கின. இந்த போரில் பாகிஸ்தான் தோற்றதுடன் தனது தோல்வியையும் ஒப்புக் கொண்டது.

இந்த போரில் இந்தியா வென்றதையடுத்து அப்போதைய பிரதமர் வாஜ்பாய் 'கார்கில் நாயகன்' என்று அழைக்கப்பட்டார். கார்கில் போர் 1999-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி நிறைவு பெற்று கார்கில் பகுதியில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது.

கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ந்தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த போரில் இந்தியா தரப்பில் 524 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 1,363 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பலத்த அடி விழுந்தது. கார்கில் போரால் பாகிஸ்தானின் பொருளாதாரமும் சீர்குலைந்தது.


கார்கில் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் லடாக் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதி பனிக் கட்டிகள் சூழ்ந்த நிலையில் எப்போதும் குளிராக காணப்படும். இதனால் இந்த பகுதி குளிர் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது. அதனால் தான் அந்த பகுதியை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் திட்டமிட்டது.

இன்று கார்கில் போரின் 25-வது ஆண்டு வெற்றி தினம் ஆகும். இதையடுத்து கார்கில் பகுதியில் 25-ம் ஆண்டு வெற்றி தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று கார்கில் பகுதிக்கு சென்றார். காலை 9.20 மணிக்கு தனி விமானத்தில் அவர் கார்கில் பகுதிக்கு சென்றார். அவரை ராணுவ வீரர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.

அங்கு கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் பிரதர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கு நடை பெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த நமது வீரர்களுக்கு இந்த தேசம் தலை வணங்குகிறது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் கடன் பட்டிருக்கிறோம்.

இந்தியா மீதான தாக்குதல்களை மறைமுகமாக இன்றும் பாகிஸ்தான் தொடர்கிறது. தீய நோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி ஒடுக்கப்படுவார்கள்.


கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை. பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பின்னால் இருந்து தூண்டி விடுகிறது.

பயங்கரவாதத்தை தூண்டி விடுபவர்களின் திட்டம் ஒரு போதும் எடுபடாது. பயங்கரவாதிகளால் இந்தியாவை ஒரு போதும் வீழ்த்த முடியாது. பயங்கரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம். பயங்கரவாதத்தின் ஒவ்வொரு முயற்சியையும் இந்தியா வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது. பயங்கரவாதத்தை நமது வீரர்கள் முழு வலிமையோடு எதிர்ப்பார்கள்.

பல ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் விழாக்கோலம் பூண்டுள்ளது. தியாகம் என்பது மரணமே இல்லாதது என்பதை கார்கில் வெற்றி நமக்கு உணர்த்துகிறது. உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இந்த நாடு கடமைப்பட்டுள்ளது. நம் தேச அன்னைக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். தேசமே முதன்மை என்ற உணர்வுக்கு வணக்கம் செலுத்துகிறேன். 370-வது பிரிவை நீக்கிய பின்னர் ஜம்மு-காஷ்மீர் பகுதி நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.

லடாக்கில் இயல்பு வாழ்க்கை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. லடாக், காஷ்மீர் வளர்ச்சிக்கு எதிரான பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் இந்தியா தோற்கடிக்கும். 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு பெறுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா துறை மேம்பட்டு வருகிறது.

ஷின்குன் லா சுரங்க பாதை திட்டம் லடாக்கின் வளர்ச்சியை மேம்படுத்தும். கடந்த 5 ஆண்டுகளில் லடாக்கின் பட்ஜெட்டை ரூ. 6 ஆயிரம் கோடியாக உயர்த்தி உள்ளோம். லடாக் இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வி கிடைக்க சிந்து பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகிறது.

இன்று பயங்கரவாதத்தின் தலைவர்கள் எனது குரலை நேரடியாக கேட்கும் இடத்தில் இருந்து நான் பேசுகிறேன். கார்கில் போரில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் உண்மை, கட்டுப்பாடு மற்றும் வலிமைக்கு ஒரு சிறந்த உதாரணத்தையும் கொடுத்தோம். பாகிஸ்தான் தவறு செய்யும் போதெல்லாம் தோல்வியையே சந்தித்து வருகிறது. கார்கில் வெற்றி தின நிகழ்ச்சிகள் தேசத்திற்காக செய்த தியாகங்கள். அவை என்றும் அழியாதவை. நமது வீரர்களின் துணிச்சலான முயற்சிகளையும், தியாகங்களையும் நாடு மதிக்கிறது.

ராணுவம் என்றால் அரசியல்வாதிகளுக்கு 'சல்யூட்' அடிப்பது, அணிவகுப்பு நடத்துவது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரை ராணுவம் என்பது 140 கோடி மக்களின் நம்பிக்கையாகும்.

இந்திய ராணுவத்தை இளமையாக உருவாக்குவதும், போருக்கு தகுதியுடையதாக ராணுவத்தை தொடர்ந்து வைத்திருப்பதும் அக்னிபத் திட்டத்தின் குறிக்கோள் ஆகும். ஆனால் துரதிஷ்டவசமாக சிலர் ராணுவத்திற்கான அக்னிபத் ஆள் சேர்ப்பு திட்டத்தில் அரசியலை புகுத்துகிறார்கள். அவர்கள் வேண்டுமென்றே இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறார்கள். இவர்கள்தான் ராணுவத்தில் ஆயிரக்கணக்கான கோடி மோசடி செய்து நமது ராணுவத்தை பலவீனப்படுத்தினார்கள்.

ஓய்வூதிய பணத்தை மிச்சப்படுத்தவே அக்னிபத் திட்டத்தை அரசு கொண்டு வந்திருப்பதாக சிலர் தவறான கருத்தை பரப்புகிறார்கள். அன்றைய அரசுகள் ராணுவ விஷயத்தில் எடுத்த முடிவுகளை நாங்கள் மதித்தோம். ஏனென்றால் எங்களுக்கு தேசிய பாதுகாப்புதான் முக்கியம், அரசியல் அல்ல.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக லடாக்கில் ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். லடாக்கில் உள்ள லே நகருக்கு செல்ல அனைத்து வானிலைகளுக்கும் ஏற்ற போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும் வகையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,800 அடி உயரத்தில் 4.1 கி.மீ. தூரத்துக்கு இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இது இரட்டை வழி சுரங்கப்பாதை ஆகும். கட்டுமான பணிகள் நிறைவடைந்த பின்னர் இது உலகின் உயரமான சுரங்கப்பாதை என்ற பெருமையை பெறும்.

இந்த சுரங்கப்பாதை எல்லை பகுதிக்கு ராணுவ வீரர்கள் மற்றும் தளவாடங்கள் விரைந்து செல்வதை உறுதி செய்வது மட்டுமின்றி, லடாக்கின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த லிங்கை கிளிக் செய்யவும்- மரணமே இல்லாதது தியாகம் என்பதை கார்கில் வெற்றி உணர்த்துகிறது- பிரதமர் மோடி

Tags:    

Similar News