பெங்களூரு கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆனது: நிவாரணம் அறிவித்த பிரதமர்
- பெங்களூருவில் பெய்த தொடர் கனமழைக்கு 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.
- இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
பெங்களூரு ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாபுசாப் பாளையாவில் புதிதாக 6 மாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வந்தது. இந்தக் கட்டிடப் பணியில் வடமாநில தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், அந்த 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டிடத்திற்குள் வேலை பார்த்த தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஹெண்ணூர் போலீசார், மீட்பு படையினர் விரைந்து வந்தனர். பொக்லைன் எந்திரம் உதவியுடன் அங்கு மீட்பு பணிகளை தொடங்கினர். கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
கட்டிட விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் மகன் மோகன், ஒப்பந்ததாரர் முனியப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.