இந்தியா

2014 முதல் ஒருநாள் கூட விடுமுறை எடுக்காத பிரதமர் மோடி: தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல்

Published On 2023-09-05 09:28 IST   |   Update On 2023-09-05 09:28:00 IST
  • நாட்டின் பிரதமர் ஒருவர் அனைத்து நேரத்திலும் பணியில் இருக்கிறார்.
  • இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

புதுடெல்லி:

குஜராத் முதல்வராக இருந்த மோடி 2014-ல் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதையடுத்து நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். 2019 தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2-வது முறையாக அவர் பிரதமர் ஆனார்.

இந்நிலையில், பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை தருமாறு தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பிரதமர் அலுவலகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில் கூறியிருப்பதாவது:-

2014 முதல் ஒருநாள் கூட பிரதமர் மோடி விடுமுறை எடுக்கவில்லை. நாட்டின் பிரதமர் ஒருவர் அனைத்து நேரத்திலும் பணியில் இருக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தகவல் அறியும் சட்டம் மூலம் அளிக்கப்பட்டுள்ள பதிலை அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசும்போது, "பிரதமர் மோடி தினமும் 18 மணி நேரம் பணியாற்றுகிறார். கடந்த 20 ஆண்டுகளில் அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததே இல்லை" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் அறியும் சட்டம் மூலம் 2-வது கேள்வியும் கேட்கப்பட்டிருந்தது. பிரதமர் பதவியேற்றது முதல் அவர் எத்தனை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என்பதே அந்த 2-வது கேள்வியாகும்.

இதற்கு பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதிலில், "இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். ஏறக்குறைய ஒரு நாளைக்கு ஒரு நிகழ்ச்சி என்ற வகையில் அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News