மணிப்பூர் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது: பிரதமர் மோடி கடும் கண்டனம்
- குற்றவாளி யாரையும் தப்பிக்க விடமாட்டோம் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்
- சட்டம் அதன் முழு வலிமையுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்கும்
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக ஒரு கும்பலால் இழுத்து செல்லப்படும் வீடியோ நேற்று வெளியானது. இந்த வீடியோ கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இது பிரதிபலிக்கும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறுகையில் ''குற்றவாளி யாரையும் தப்பிக்க விடமாட்டோம் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். சட்டம் அதன் முழு வலிமையுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்கும். மணிப்பூர் மகளுக்கு நடந்த கொடூரம் மன்னிக்க முடியாதது.
என இதயம் கோபம் மற்றும் வலியால் நிறைந்திருக்கிறது. மணிப்பூர் சம்பவம் எந்தவொரு நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடானது. மாநில சட்டம்-ஒழுங்கு, குறிப்பாக பெண்கள் பாதுகாப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த மாநில முதல்வர்களை வலியுறுத்துகிறேன்'' என்றார்.