இந்தியா

எதிர்க்கட்சிகள் கூட்டணி பெயரை மாற்றியதற்கு இதுதான் காரணம்- பிரதமர் மோடி விமர்சனம்

Published On 2023-07-27 14:38 IST   |   Update On 2023-07-27 15:22:00 IST
  • ராஜஸ்தான் சிகாரில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
  • இளைஞர்களின் எதிர்காலத்தில் ராஜஸ்தான் விளையாடுகிறது.

பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றார். அங்கு சிகார் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். 1.25 லட்சம் பிரதமரின் விவசாயிகள் வள மையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சல்பர் பூசப்பட்ட புதிய வகை யூரியாவான யூரியா கோல்ட்டை அறிமுகம் செய்தார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 14-வது தவணை தொகை சுமார் ரூ.17 ஆயிரம் கோடியை 8½ கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடி பணப்பரிமாற்றம் மூலம் விடுவித்தார்.

டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த இணையதள அமைப்பில் 1500 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை இணைக்கும் நடை முறையை தொடங்கி வைத்தார்.

சித்தோர்கர், தோல்பூர், சிரோஹி, சிகார், ஸ்ரீகங்கா நகர் ஆகிய இடங்களில் புதிய மருத்துவ கல்லூரி களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் 7 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

உதய்பூர், பன்ஸ்வாரா, பர்தாப்கர், துங்கர்பூர் ஆகிய மாவட்டங்களில் 6 ஏகலவ்யா மாதிரி உறைவிட பள்ளிகளை திறந்து வைத்த அவர், ஜோத்பூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா தீவ்ரி எனப்படும் சிறப்பு மையத்தையும் தொடங்கி வைத்தார்.

விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தானுக்கு கடந்த 6 மாநிலங்களில் பிரதமர் மோடி 7-வது முறையாக பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ராஜஸ்தான் சிகாரில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஏழை மக்களுக்கு எதிராக நீங்கள் எப்படி சதி செய்தீர்கள் என்பதை மறைக்க எதிர்க்கட்சியினர்தங்கள் பெயரை UPA-ல் இருந்து I.N.D.I.A என்று மாற்றிக்கொண்டனர்.

காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முந்தைய மோசடி நிறுவனங்களைப் போலவே தங்கள் பெயரை மாற்றியுள்ளன. அவர்கள் பயங்கரவாதத்தின் முன் படிந்த கறையை அகற்றுவதற்காக அவர்கள் தங்கள் பெயரை மாற்றியுள்ளனர். அவர்களின் வழிகள் நாட்டின் எதிரியைப் போலவே உள்ளன. இந்தியா என்ற பெயர் அவர்களின் தேசபக்தியைக் காட்டுவதற்காக அல்ல. மாறாக நாட்டைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் உள்ளது.

இளைஞர்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. ஆனால் ராஜஸ்தானில் என்ன நடக்கிறது? இளைஞர்களின் எதிர்காலத்தில் ராஜஸ்தான் விளையாடுகிறது. மாநிலத்தில் காகித கசிவு நடக்கிறது. மாநில இளைஞர்கள் திறமையானவர்கள். ஆனால் இங்குள்ள அரசு அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News