இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரத்தில் தங்க தகடு பதிக்கும் பணி ஒத்திவைப்பு

Published On 2023-01-28 10:19 IST   |   Update On 2023-01-28 11:44:00 IST
  • திருப்பதி ஏழுமலையான் கோவில் கருவறை மேல் உள்ள ஆனந்த நிலையம் தங்க கோபுரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தங்க தகடுகள் பதிக்கப்பட்டது.
  • கோபுரத்தில் தங்க முலாம் புதுப்பிக்கும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவில் கருவறை மேல் உள்ள ஆனந்த நிலையம் தங்க கோபுரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தங்க தகடுகள் பதிக்கப்பட்டது.

பொலிவிழந்து காணக்கூடிய இத்தங்க தகடுகளை புதிதாக மாற்ற தேவஸ்தான அறங்காவலர் குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக அடுத்த மாதம் 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பணிகள் செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறுகையில்:-

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருப்பதியில் உள்ள கோவிந்த ராஜ சாமி கோவிலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கோபுரங்களில் தங்க தகடுகள் பதிப்பதற்காக பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நிறைவு பெறவில்லை.

மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவிந்தராஜ சாமி கோவிலில் குறைந்த அளவு பக்தர்கள் வருவார்கள். எனவே 2 ஆண்டுகள் ஆனாலும் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் ஏழுமலையான் கோவிலில் அவ்வாறு இல்லை. ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தினந்தோறும் தரிசனம் செய்யக்கூடிய நிலையில் காலதாமதமாவது சரியாக இருக்காது.

எனவே சர்வதேச அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கோபுரத்தில் தங்க முலாம் புதுப்பிக்கும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 முதல் 6 மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டு புதிய ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் விரைந்து முடிக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News