இந்தியா

காயமடைந்தவரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் 

மோர்பி தொங்கு பால விபத்து- காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்

Published On 2022-11-01 12:04 GMT   |   Update On 2022-11-01 14:36 GMT
  • காயமடைந்தவர்களுக்கு மோர்பி நகர மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • மிகப்பெரிய ஊழலால் தொங்கு பால விபத்து நிகழ்ந்துள்ளதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.

ஆமதாபாத்:

குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த கேபிள் தொங்கு பாலம் கடந்த 30-ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 141-பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு மோர்பி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி இன்று அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக விபத்து நடந்த இடத்தை அவர் ஆய்வு செய்ததாக தகவல்கள் வெளியாகின.

தொங்கு பாலத்தை புனரமைக்கும் ஒப்பந்தம் ஒரேவா என்ற தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டு இருந்தது. அந்த நிறுவனம் கடந்த 7 மாதங்களாக பாலத்தை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டது. கடந்த வாரம் அப்பாலம் மீண்டும் திறக்கப்பட்டு இருந்தாலும் பாலத்துக்கான மாநகராட்சி தர சான்றிதழை அந்த நிறுவனம் பெறவில்லை.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக ஒரேவா நிறுவனத்தின் மேலாளர் இருவர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தக் கோரிய பொதுநல மனுவை, வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மோர்பி தொங்கு பாலத்தில் ஏற்பட்ட விபத்து, மிகப்பெரிய ஊழலால் நிகழ்ந்தது என்று, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். பாலத்தை சீரமைப்பதில் எந்த அனுபவமும் இல்லாத, நிறுவனத்திடம், ஏன் ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டது, குஜராத் அரசுக்கு வேண்டியவர்களுக்கு இந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

Similar News