இந்தியா
null

பிரதமர் மோடி நாளை பீகார் செல்கிறார்

Published On 2024-06-18 03:45 GMT   |   Update On 2024-06-18 05:11 GMT
  • விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
  • 17 நாடுகளின் தூதர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

புதுடெல்லி:

பிரதமராக கடந்த 9-ந்தேதி பதவியேற்ற மோடி வாரணாசிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) செல்கிறார்.

மாலை 5 மணியளவில் நடைபெறும் விவசயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் கீழ் 926 கோடி விவசாயிகளுக்கு 17-வது தவணையாக ரூ.20 ஆயிரம் கோடியை அவர் விடுவிக்க உள்ளார்.

அத்துடன் வேளாண் தோழிகள் (கிருஷி சகி) திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 30 ஆயிரம் பெண்களுக்கு சான்றிதழ் வழங்க உள்ளார்.

பின்னர் தசாசுவமேத படித்துறையில் கங்கை ஆரத்தியில் பங்கேற்கும் பிரதமர், காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் மோடி வாரணாசிக்கு வருவதாக மாவட்ட பா.ஜ.க. ஊடகப் பிரிவு பொறுப்பாளர் அரவிந்த் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு வருவாய் ரீதியில் ஆதரவளிக்கும் நோக்கில் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 11 கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.3 லட்சம் கோடி நிதி நேரடி பலன் பரிமாற்ற முறையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் வெற்றியை அடுத்து நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற பின் இத்திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் கோடியை விடுவிப்பதற்கான கோப்பில் தான் மோடி முதல் கையொப்பமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணாசியை தொடர்ந்து நாளை (புதன்கி ழமை) பீகார் மாநிலத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, ராஜ்கிர் பகுதியில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைக்கிறார்.

இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பில் உருவாகி உள்ள இந்த வளாகத்தின் திறப்பு விழாவில் 17 நாடுகளின் தூதர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

இரண்டு கட்டப்பிரிவுகளுடன் கூடிய இவ்வளாகத்தில் மொத்தம் 1,200 இருக்கை வசதியுடன் 40 வகுப்பறைகளும் தலா 300 இருக்கைகளுடன் இரு கலை அரங்குகளும் உள்ளன.

550 மாணவர்கள் தங்கும் வசதி கொண்ட விடுதி, சர்வதேச மையம், 2 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையிலான திறந்த வெளி அரங்கம், ஆசிரியர் மன்றம், விளையாட்டு வளாகம் உள்ளிட்டவை அமைந்து உள்ளன.

சூரிய மின்உற்பத்தி அமைப்பு, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் மறுசுழற்சி நிலையம், சுமார் 700 ஏக்கரில் நீர்நிலைகள் உள்பட சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகளுடன் 100 சதவீத பசுமை வளாகமாக அமைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News