இந்தியா

பஞ்சாப் ராணுவ முகாமில் மேலும் ஒரு வீரர் குண்டு பாய்ந்து பலி

Published On 2023-04-13 06:35 GMT   |   Update On 2023-04-13 06:35 GMT
  • கமலேஷ், யோகேஷ் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மற்ற 2 பேர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
  • மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ தலைமை தளபதி மனோஜ்பாண்டே விளக்கம் அளித்துள்ளார்.

பதிண்டா:

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4.35 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து ராணுவ முகாமை அதிரடி படையினர் சுற்றி வளைத்தனர். நுழைவு வாயில்கள் மூடப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது.

அப்போது ராணுவ முகாமில் 4 வீரர்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் அனைவரும் பீரங்கி படையை சேர்ந்தவர்கள்.

அடையாளம் தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சாகர்பன்னே (25), கமலேஷ் (24), யோகேஷ் குமார் (24), சந்தோஷ் (24) ஆகிய 4 ராணுவ வீரர்கள் குண்டு பாய்ந்து பலியானார் கள்.

இதில் கமலேஷ், யோகேஷ் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மற்ற 2 பேர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

ராணுவ முகாமில் 4 வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அடையாளம் தெரியாத 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பஞ்சாப் போலீஸ் அதிகாரி பர்மர் கூறும்போது, 'தீவிரவாத தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. ராணுவ முகாமில் இருந்த வீரர், சக வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 வீரர்கள் பலியானார்கள். 2 நாட்களுக்கு முன்பு ராணுவ முகாமில் ஒரு இன்சாஸ் துப்பாக்கி, 28 குண்டுகள் மாயமானது. இதன் பின்னணியில் ராணுவ வீரர்கள் சிலர் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து ராணுவமும், பஞ்சாப் போலீசும் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது என்றார்.

இந்த சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ தலைமை தளபதி மனோஜ்பாண்டே விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் பதிண்டா ராணுவ முகாமில் இன்று மேலும் ஒரு ராணுவ வீரர் குண்டு பாய்ந்து பலியானார்.

4 வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட 12 மணி நேரத்துக்கு பிறகு துப்பாக்கி சூடு காயங்களுடன் ராணுவ வீரர் உயிரிழந்து உள்ளார். தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் ராணுவ வீரர் குண்டு பாய்ந்து பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நேற்று மாலை 4.30 மணியளவில் ராணுவ முகாமில் ராணுவ வீரர் தனது துப்பாக்கியுடன் குண்டு பாய்ந்த நிலையில் காயத்துடன் கிடந்தார். அவரை ராணுவ மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார்.

4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறுதலாக துப்பாக்கி சூடு நடந்து இருக்கலாம். தற்கொலை முயற்சியாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News