ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பு: ஜார்க்கண்ட் சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடும் அமளி
- குஜராத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காங்கிரசார் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
- ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்ததற்கு பாஜகதான் பொறுப்பு என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டினர்.
ராஞ்சி:
மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்துடன், அவர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரசார் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரம் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்ததற்கு பாஜகதான் பொறுப்பு என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.
காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்களும் குரல் எழுப்பி, அவையின் மையப்பகுதிக்கு வந்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.