இந்தியா

மக்களவை கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி கோரிக்கை

Published On 2023-08-02 19:18 GMT   |   Update On 2023-08-02 19:18 GMT
  • அவதூறு வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
  • அதில் மக்களவையின் தற்போதைய அமர்வுகளில் பங்கேற்க வழிவகை செய்யவேண்டும் என்றார்.

புதுடெல்லி:

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதனால் அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார்.

இதற்கிடையே, அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே. மிஷ்ரா ஆகியோர் தலைமையிலான அமர்வு இந்த மனுவை கடந்த மாதம் 21-ம் தேதி விசாரித்தது. மனுவுக்கு பதில் அளிக்க குஜராத் அரசுக்கும், பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்டு 4-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவதூறு வழக்கில் தான் குற்றவாளி இல்லை. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால், அதை முன்னதாகவே செய்திருப்பேன். எனவே தன் மீதான தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும். மக்களவையின் தற்போதைய அமர்வுகளிலும், இதன்பிறகு நடைபெறும் அமர்வுகளிலும் பங்கேற்க வழிவகை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News