null
ஹத்ராஸ் விவகாரம்- பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்: முதல்-மந்திரிக்கு ராகுல் கடிதம்
- காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.
- ஹத்ராசில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது மிகவும் சோகமானது.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே புல்ராய் கிராமத்தில்சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே பலியானவர்களின் குடும்பத்தினரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஹத்ராசில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது மிகவும் சோகமானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கும் போது எனக்கு ஆறுதல் வார்த்தைகள் வரவில்லை. உள்ளூர் நிர்வாகத்தின் அலட்சியமும், கவனக் குறைவும்தான் இந்த முழு விபத்துக்கும் காரணம் என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இந்த வழக்கில் முறையான மற்றும் வெளிப்படையான விசாரணை எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான சரியான நடவடிக்கையாக மட்டு மல்லாமல், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் மனதில் நீதி அமைப்பு மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ள இழப்பீடு மிகவும் போதுமானதாக இல்லை. இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் வழங்க கேட்டுக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.