கார்கே, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பார்கள் என நம்பினோம்: சிவராஜ் சிங் சவுகான்
- ஒவ்வொரு கட்சிக்கும் தங்களை பிரச்சனைகளை வெளிப்படுத்த உரிமை உள்ளது.
- ராகுல் காந்தியின் நடவடிக்கை குண்டர்கள் போல் இருந்தது.
பாராளுமன்றத்தில் இன்று பா.ஜ.க. எம்.பி.க்களுக்கும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பா.ஜ.க. எம்.பி.க்கள். இருவர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக பரஸ்பர குற்றச்சாட்டுகள் இருபுறம் இருந்து வைக்கப்படுகிறது. போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:-
ஒவ்வொரு கட்சிக்கும் தங்களை பிரச்சனைகளை வெளிப்படுத்த உரிமை உள்ளது. ஆனால், இன்று பாஜக தலைவர்கள் மகர் துவார் பகுதியில் போராட்டம் நடத்தும்போது ராகுல் காந்தி வேண்டுமென்றே அந்த பகுதிக்கு வந்தார். பாதுகாவலர்கள் அவர்களை வேறு வாசலை (Gate) பயன்படுத்த சொன்ன போதிலும் பா.ஜ.க. எம்.பி.க்களை தள்ள ஆரம்பித்தனர்.
ராகுல் காந்தியின் நடவடிக்கை குண்டர்கள் போல் இருந்தது. அவர் தள்ளிவிட ஆரம்பித்தார். எங்களுடைய வயது மூத்த எம்.பி. பிரதாப் சாரங்கி கீழே விழுந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அவர் மயக்க நிலையில் உள்ளார்.
நாடாளுமன்றத்தில் தர்க்கத்திற்குப் பதிலாக உடல் ரீதியான அதிகாரம் பயன்படுத்தப்படுமா?. பழங்குடியின பெண் கூறியதில் நாங்கள் வேதனையடைகிறோம். அவர் மாநிலங்களவை எம்.பி.யுடன் புகார் அளித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எம்.பி. ராகுல் காந்தி இன்று பத்திரிகையார்களை சந்தித்துள்ளனர். பாராளுமன்றத்தில் இன்று அவர்கள் நடந்து கொண்ட நடத்தைக்கு மன்னிப்பு கேட்பாளர்கள் என்று நம்பினோம். ஆனால் அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை.
இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.