இந்தியா

நடிகை சோனாலி சாவில் திடீர் திருப்பம்: கொலை செய்யப்பட்டதாக சகோதரர் புகார்

Published On 2022-08-25 02:51 GMT   |   Update On 2022-08-25 02:51 GMT
  • பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் 22-ந்தேதி மரணம் அடைந்தார்.
  • சோனாலி மரணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன்பாக அம்மாவிடம் செல்போனில் பேசினாள்.

பனாஜி :

அரியானா மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் (வயது 42) கோவாவுக்கு விடுமுறையை கழிக்க தனது கூட்டாளிகளுடன் சென்றிருந்தார். ஆனால் அவர் அங்கு 22-ந் தேதி திடீர் மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக போலீஸ் தரப்பில் முதலில் கூறப்பட்டது.

ஆனால் இப்போது இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சோனாலி மரண தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு கோவா வந்தனர். அதைத்தொடர்ந்து, நடிகை சோனாலி தனது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது சகோதரர் ரிங்கு டாகா திடுக்கிடும் புகார் கூறி உள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-

தனது மரணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன்பாக சோனாலி, அம்மாவிடம் செல்போனில் பேசினாள். அப்போது அவள் கலக்கம் அடைந்திருந்தாள். தனது 2 கூட்டாளிகள் மீது புகார் கூறினாள். அவர்களால் அவள் கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.

அவளது மரணத்தைத் தொடர்ந்து அரியானாவில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து ரகசிய கண்காணிப்பு கேமராக்கள், மடிக்கணினி, முக்கிய பொருட்கள் யாவும் காணாமல் போய் உள்ளன.

என் சகோதரியின் பிரேத பரிசோதனையை டெல்லி அல்லது ஜெய்ப்பூர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் நடத்துவதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நடிகை சோனாலி மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என கூறி கோவா போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே கோவா முதல்-மந்திரி பிரமோத் சவந்த், "இந்த விவகாரத்தில் கோவா போலீஸ் விசாரணை நடத்துகிறது. நான் டி.ஜி.பி. ஜஸ்பால் சிங்கிடம் வழக்கு விசாரணை நிலவரம் குறித்து கேட்டறிந்து வருகிறேன்" என தெரிவித்தார்.

இருப்பினும் நடிகை சோனாலி சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என அரியானா எதிர்க்கட்சிகள் ஓங்கிக்குரல் கொடுத்து வருகின்றன.

Tags:    

Similar News