சோனாலி போகத்தின் மரணம் திட்டமிட்ட கொலை... சிபிஐ விசாரணை கேட்கும் மகள்
- கொலைக்கான காரணம் குறித்து குற்றவாளிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
- விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் கோவா முதல்வர் தகவல்
ஹிசார்:
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பா,ஜனதா மகளிரணி நிர்வாகியுமான சோனாலி போகத் (42) கோவாவில் கடந்த 22ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அவரது உதவியாளர்கள் 2 பேர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனா. சோனாலி அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்து உள்ளது. சோனாலி மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி சோனாலி போகத்தின் மகள் யசோதரா போகத் கூறியதாவது:-
தற்போது கோவா போலீசார் நடத்தி வரும் விசாரணையில் எங்கள் குடும்பத்தினருக்கு திருப்தி இல்லாததால் சிபிஐ விசாரணை நடத்தவேண்டும். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று அரியானா முதல் மந்திரி கூறினார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குற்றவாளிகள் கோவாவில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். ஆனால் கொலைக்கான காரணம் குறித்து அவர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்வரை பின்வாங்கமாட்டோம்.
கோவாவில் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஷூட்டிங் இருக்கும் என்று அம்மா சொன்னார். ஆனால் இரண்டு நாட்களுக்கு மட்டுமே ரிசார்ட் முன்பதிவு செய்யப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகவே இது திட்டமிட்ட கொலை என்று தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சோனாலியின் மரணம் பற்றிய ரகசிய அறிக்கை அரியானா காவல்துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பப்பட்டது. கோவா டிஜிபி ஜஸ்பால் சிங், இந்த வழக்குதொடர்பாக கோவா முதல் மந்திரி சாவந்திடம் ஐந்து பக்க அறிக்கையை அளித்திருந்தார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
இந்த வழக்கில் கோவா காவல்துறையின் விசாரணை திருப்திகரமாக இருப்பதாகவும், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.