இந்தியாவில் நாசவேலைக்கு சதி திட்டம்: கர்நாடகா, மகாராஷ்டிராவில் 44 இடங்களில் சோதனை
- கைதான 15 பேரும் சமீப காலமாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினருடன் பல்வேறு வகைகளில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது.
- கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் சில ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களை போலீசார் கைது செய்திருந்தனர்.
பெங்களூரு:
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் சர்வதேச அளவில் மிக பயங்கரமான தீவிரவாத இயக்கமாக கருதப்படுகிறது.
அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவில் சிலர் ரகசியமாக செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து அடிக்கடி என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆங்காங்கே அதிரடி சோதனை நடத்தி பலரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய நாசவேலைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கலவரத்தை தூண்டவும் அந்த இயக்கத்தினர் சதி செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் உளவுத்துறைக்கு தெரிய வந்தது. இதுபற்றி அவர்கள் மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். இரு மாநிலங்களிலும் 44 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
கர்நாடகாவில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சோதனை நடத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் 31 இடங்களில் அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடத்தினார்கள்.
புனேயில் 2 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. பயாந்தர் நகரிலும் ஒரு இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடத்தி வருகிறார்கள். மத்திய துணை நிலை ராணுவ பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்து வருகிறது.
உள்ளூர் போலீசாரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக சென்றுள்ளனர்.
44 இடங்களில் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது அங்கிருந்த 15 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். பிறகு அவர்களை மேலும் விசாரிப்பதற்காக அழைத்து சென்றனர். அவர்கள் 15 பேரும் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைதான 15 பேரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் ரகசிய தொடர்பில் இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான ஆவணங்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இது தவிர சோதனை நடந்த இடங்களில் இருந்து லேப்டாப்புகள், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதான 15 பேரும் சமீப காலமாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினருடன் பல்வேறு வகைகளில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது. இந்த 15 பேர் மூலம் இந்தியாவின் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் நடத்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இன்று நடந்த சோதனை மூலம் மிகப்பெரிய நாச வேலை சதி திட்டம் முறியடிக்கப்பட்டு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம்தான் புனே நகரில் ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
அவர்கள் இந்தியாவில் நாசவேலை செய்ய நிதி திரட்டியதும், பயிற்சி பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலும் இன்றைய சோதனை நடத்தப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் சில ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் தானே மாவட்டத்தில் நடந்த சோதனையிலும் ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறும் சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.