இந்தியா

பாம்பு கடிக்கு பயந்து அசைவம் சாப்பிடாத கிராம மக்கள்

Published On 2022-11-05 11:45 IST   |   Update On 2022-11-05 16:06:00 IST
  • கிராம மக்கள் அசைவ உணவு சாப்பிட்டால் பாம்பு கடிக்கும் என்று நம்புவதாக தெரிவித்தனர்.
  • கிராமத்தில் உள்ள அனைவருமே சைவ உணவையே சாப்பிடுகிறார்கள்.

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம், தேன்கனல் மாவட்டத்தில் பென்டசாலியா கிராமத்தில் உள்ள மக்கள் அசைவ உணவே சாப்பிடுவதில்லை.

இதுபற்றிய தகவல் வெளியானதும், அந்த கிராம மக்கள் அசைவ உணவை சாப்பிடாதது ஏன்? என்று பலரும் விசாரிக்க தொடங்கினர். இதில் வெளியான தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதற்கு காரணம் இக்கிராம மக்கள் அசைவ உணவு சாப்பிட்டால் பாம்பு கடிக்கும் என்று நம்புவதாக தெரிவித்தனர். காலம், காலமாக இதனை கடைபிடித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

கிராமத்தின் நம்பிக்கைக்கு எதிராக யாராவது அசைவ உணவு சாப்பிட்டால் அவர்களுக்கு கண்பாதிப்பு ஏற்படும், உடல் நலக்குறைபாடுகள் உருவாகும் என்றும் முன்னோர் கூறியுள்ளதாக தெரிவித்தனர்.

இதன்காரணமாக அந்த கிராமத்தில் உள்ள அனைவருமே சைவ உணவையே சாப்பிடுகிறார்கள்.

சைவ உணவை சாப்பிடுவதால் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் யாரும் ஆடு, கோழி போன்ற வீட்டு விலங்குகளையும் வளர்ப்பதில்லை.

இதுபற்றி அக்கிராம மக்கள் கூறும்போது, எங்கள் நம்பிக்கைக்கு எதிராக இங்குள்ள யாராவது அசைவம் சாப்பிட்டால் அவர் கண்டிப்பாக கடவுளின் தண்டனையை அனுபவிப்பார் என்றனர்.

Tags:    

Similar News