மழைநீரில் பயிர்கள் மூழ்கி நஷ்டம்: மனைவியுடன் விவசாயி தற்கொலை
- குத்தகைக்கு எடுத்த 5 ஏக்கரில் பயிர் மற்றும் பருத்தி பயிரிட்டு இருந்தார்.
- தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்த பலத்த மழை மற்றும் காளீஸ்வரம் தடுப்பணையால் அசோக்கின் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மந்தினி மண்டலம், வெள்ளிப்பள்ளியை சேர்ந்தவர் அசோக் (வயது 33). இவரது மனைவி சங்கீதா (30). தம்பதிக்கு 5 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.
அசோக் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவரின் 5 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தார்.
குத்தகைக்கு எடுத்த 5 ஏக்கரில் பயிர் மற்றும் பருத்தி பயிரிட்டு இருந்தார். தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்த பலத்த மழை மற்றும் காளீஸ்வரம் தடுப்பணையால் அசோக்கின் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது.
விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற அசோக் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அவரது முயற்சிகள் தோல்வி அடைந்ததால் பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமானது.
பயிரிட முதலீடு செய்த பணம் கூட கிடைக்காமல் அசோக் கடனில் தவித்து வந்தார்.
தெலுங்கானா அரசும் சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை. இதனால் அசோக் கந்து வட்டிக்காரர்களிடம் பணம் வாங்கினார்.
கந்து வட்டிக்காரர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அவர்களின் நெருக்கடியை தாங்க முடியாமல் அசோக் அவரது மனைவி சங்கீதா இருவரும் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்டதால் அவர்களது 2 குழந்தைகளும் தவித்து வருகின்றனர்.