இந்தியா

சகதியில் சிக்கி பல மணி நேரம் தவித்த மூதாட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

Published On 2023-12-20 05:44 GMT   |   Update On 2023-12-20 05:44 GMT
  • மூதாட்டி மீதிருந்த சகதியை தண்ணீரை ஊற்றி கழுவினர்.
  • மூதாட்டியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மாரட் பகுதியை சேர்ந்த மூதாட்டி கமலா ஷியம்மா(வயது79). இவர் தனது மனவளர்ச்சி குன்றிய மகனுடன் தனியாக வசித்து வருகிறார். அந்த மகனின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால், வயதான காலத்திலும் வேலைக்கு சென்று வந்தார்.

கமலாஷியம்மா வீட்டுக்கு வரும் வழியில் சில நாட்களுக்கு முன்பு யாரோ மர்ம நபர்கள் குப்பைகளை அதிகளவில் கொட்டிவிட்டனர். அதில் புற்கள் அதிகளவில் வளர்ந்திருந்ததால், அது தான் வழி என்று குறுக்கு வழியில் நடந்துசெனறார். இதனால் அவர் அங்கிருந்த சகதியில் சிக்கிக்கொண்டார்.

அதிலிருந்து வெளியேற போராடியிருக்கிறார். ஆனால் அந்த சகதியிலேயே தவறி விழுந்துவிட்டார். இதனால் அவரால் எழுந்து வர முடியவில்லை. தன்னை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டிருக்கிறார். ஆனால் அவரது சத்தம் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்தவர்களுக்கு கேட்கவில்லை.

இதனால் பல மணி நேரமாக சகதியில் சிக்கிய நிலையில் போராடியபடி இருந்திருக்கிறார். இந்த நிலையில் கமலாஷியம்மாவின் பக்கத்து வீட்டு பெண் ஒருவர், துவைத்து காயப்போட்டிருந்த துணிகளை எடுப்பதற்காக தனது வீட்டின் மாடிக்கு வந்திருக்கிறார்.

அப்போது மூதாட்டி கமலாஷியம்மா சகதியில் சிக்கி கிடப்பதை பார்த்தார். அதுபற்றி திருப்புவண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் வினு ராஜ், உதவி அலுவலர் சந்தோஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அவர்கள் கயிறு மற்றும் பிற உபகரணங்களை பயன்படுத்தி மூதாட்டி கமலாஷியம்மாவை போராடி மீட்டனர். பின்பு அவரை அந்த பகுதியில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் தூக்கி வந்தனர். பின்பு மூதாட்டி மீதிருந்த சகதியை தண்ணீரை ஊற்றி கழுவினர்.

பின்பு மூதாட்டியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சகதியில் சிக்கிய மூதாட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News