30 பயணிகளை காப்பாற்றி உயிரை விட்ட அரசு பஸ் டிரைவர்
- பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரீத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
- டிரைவர் பரீத்தின் மறைவுக்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள செம்பரக்கல் பகுதியை சேர்ந்தவர் பரீத் (வயது49). இவர் கேரள அரசு போக்குவரத்து கழக தம்பனூர் சென்ட்ரல் பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பஸ்சை ஓட்டிச்சென்றார்.
கருநாகப்பள்ளி பஸ் நிலையத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரீத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார். பின்பு நெஞ்சுவலி தாங்க முடியாமல் பஸ்சுக்குள்ளேயே சுருண்டு படுத்தார். இதையடுத்து அவர் கருநாகப்பள்ளி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்பு மேல்சிகிச்சைக்காக வந்தனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதும், பரீத் தான் ஓட்டிவந்த பஸ்சை கவனமாக மெதுவாக ஓட்டிச்சென்று ரோட்டோரமாக நிறுத்தி விட்டார். இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்து வந்த 30 பயணிகள் தப்பினர்.
பயணிகளை காப்பாற்றி விட்டு, தனது உயிரை விட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டிரைவர் பரீத்தின் மறைவுக்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.