இந்தியா

ககன்யான் திட்ட வீரர்களின் பெயர்களை அறிவித்தார் பிரதமர் மோடி

Published On 2024-02-27 07:11 GMT   |   Update On 2024-02-27 07:33 GMT
  • விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களை கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
  • ககன்யான் திட்டத்திற்காக தேர்வான 4 விண்வெளி வீரர்களின் பெயர்களை அறிவித்தார்.

திருவனந்தபுரம்:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 மாதங்களில் மூன்றாவது முறையாக இன்று கேரளாவுக்கு சுற்றுப் பயணம் வந்தார். அவர் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடக்கும் பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டார்.

திருவனந்தபுரத்திற்கு இன்று காலை விமானத்தில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, முதலில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். அங்கு ககன்யான் திட்ட பணிகளை இஸ்ரோ தலைவர் சோம்நாத்துடன் சென்று பார்வையிட்டார்.

அப்போது விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகளை பிரதமர் மோடிக்கு, சோம்நாத் அறிமுகம் செய்துவைத்தார். விண்வெளி திட்டங்கள் மற்றும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட உபகரணங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் இஸ்ரோ தலைவர் விளக்கினார்.

அப்போது கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், மத்திய மந்திரி முரளிதரன், கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் உள்ளிட்டோர் பிரதமருடன் சென்றனர். பின்பு ககன்யான் திட்டம் தொடர்பாக திருவனந்தபுரம், நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள ரூ1,800கோடி மதிப்பிலான புதிய வசதிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு மனிதர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அதற்காக தேர்வு செய்யப்பட்ட 4பேர் ககன்யான் திட்ட விண்வெளி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். விணவெளி பயணத்துக்காக அந்த 4 பேரும் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு பயிற்சி பெற்று வருகின்றனர்.

தேர்வானர்கள் பெயர் விவரம் இன்று தெரிய வந்தது. அவர்களது பெயர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத்பிரதாப், அஜித் கிருஷ்ணன், சவுகான். இவர்கள் 4 பேரும் இந்திய விமானப்படையில் விமானியாக பணியாற்றி வருகிறார்கள்.

அவர்களில் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள நென்மாரா பகுதியை சேர்ந்தவர் ஆவார். விமானப்படை குரூப் கேப்டனாக பணியாற்றி வருகிறார்.

விண்வெளி பயணத்துககு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விமானிகள், ரஷ்யா மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மனித விண்வெளி விமான மையத்தில் கடுமையான பயிற்சி பெற்றவர்கள் ஆவர். ககன்யான் திட்டத்தில் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ள அவர்களது 4பேரின் பெயர் விவரத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.

பின்பு விண்வெளி பயணத்துக்கு தேர்வாகியுள்ள பிரசாந்த் பால கிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சவுகான் ஆகி யோருக்கு விண்வெளி சிறகுகள் என்ற பதக்கத்தை வழங்கினார். இவர்களுக்கு சுபன்ஷு சுக்லா குழுவின் விங் கமாண்டராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்துக்கு சென்றார். அங்கு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரனின் பாதயாத்திரை நிறைவுவிழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அங்கு சுரேந்திரனின் பாதயாத்திரையை நிறைவு செய்து பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

Similar News