பெங்களூருவில் கொட்டி தீர்த்த கன மழை- தெருவே ஆறுபோல மாறியது
- பெல்லந்தூரில் சாலைகள் தெரியாத அளவுக்கு மழை நீர் நிரம்பியது.
- கனமழையால் எச்.ஏ.எல். விமான நிலைய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெங்களூரு:
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று கனமழை பெய்தது. பரவலாக பெய்த கனமழையால் சாலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, குறிப்பாக, பெங்களூரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வர்தூர் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒயிட்பீல்ட் டவுன்ஷிப் பகுதியில் 60 மிமீ மழை பதிவாகியுள்ளது. பல மழைநீர் வடிகால்கள் நிரம்பி அருகில் உள்ள பகுதிகளில் மழைநீர்புகுந்தது.
மழை காரணமாக பெல்லந்தூர் ஏரி மட்டுமின்றி, ஹல்லேநாயக்கனஹள்ளி, வர்தூர் ஏரிகளும் நிரம்பின. கனமழையால் சாலைகள் தண்ணீரில் மூழ்கின. பெங்களூரு மாரத்தஹள்ளியில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடுபிசனஹள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் தண்ணீர் புகுந்து பரபரப்பு ஏற்பட்டது.
பெல்லந்தூரில் சாலைகள் தெரியாத அளவுக்கு மழை நீர் நிரம்பியது. கனமழையால் எச்.ஏ.எல். விமான நிலைய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வர்தூரில் பெய்த கனமழையால் ரோட்டில் தண்ணீர் தேங்கி தெருவே ஆறு போல் காட்சியளித்தது.
மழையால் வர்த்தூர் சுற்றுவட்டாரப் பகுதிக்கு கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மெஜஸ்டிக், கே.ஆர்.மார்க்கெட், டவுன்ஹால், மாநகராட்சியை சுற்றிலும் மழை பெய்ததால், இரவில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பெங்களூருவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடம், தெற்கு உள்நாடு பெங்களூரு கிராமப்புறங்கள், பெங்களூரு நகரம், சிக்கபள்ளாப்பூர், கோலார் போன்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகா கடற்கரையில் மணிக்கு 40-45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளி வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.