இந்தியா

ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம்விட சிறப்பு வக்கீலை கர்நாடக அரசு நியமித்தது

Published On 2023-04-07 07:26 GMT   |   Update On 2023-04-07 07:26 GMT
  • கர்நாடக முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நரசிம்ம மூர்த்தி மேல்முறையீடு செய்தார்.
  • கர்நாடகா அரசு தரப்பில் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டதால், விரைவில் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம்விட வாய்ப்பு உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

பெங்களூர்:

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 27 ஆண்டுகளாக கர்நாடகா கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் 27 வகை பொருள்களை மட்டும் ஏலம்விட்டு அதில் வரும் தொகையை கொண்டு சொத்துக்குவிப்பு வழக்கிற்கு செலவிடப்பட்ட நிதியை வசூல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கர்நாடக முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நரசிம்ம மூர்த்தி மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமச்சந்திரா, சிறப்பு வழக்கறிஞரை நியமித்து ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களையும் ஏலம் விட்டு நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டார். அதன்படி, ஜெயலலிதாவின் வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள், தங்க நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள், 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த புடவைகள், 44 குளிர்சாதன இயந்திரங்கள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார சேர்கள், 81 தொங்கு விளக்குகள், 20 சோபா செட்கள், 250 சால்வைகள், 12 குளிர்பதன பெட்டிகள், 10 தொலைக்காட்சி பெட்டிகள், 8 சிவிஆர் கருவிகள், 140 வீடியோ கேசட்டுகள் ஆகியவை ஏலத்தில் விற்கப்பட இருக்கின்றன.

இதனிடையே தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் சொத்துகளை ஏலம்விட வழக்கறிஞர் நியமிக்கப்படாததால் கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர் மீண்டும் மனுத் தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இதுபற்றி விரைவில் விசாரிக்க உள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட சிறப்பு வழக்கறிஞராக கிரண் எஸ்.ஜாவலியை நியமித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் இவர் மேற்கொள்வார் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா அரசு தரப்பில் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டதால், விரைவில் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம்விட வாய்ப்பு உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

Tags:    

Similar News