100 ஆண்டுக்கால பிரச்சினை 100 நாட்களில் தீர்க்க முடியாது- பிரதமர் மோடி
- உலக நாடுகள் பொருளாதார சிக்கலில் தத்தளிக்கும் நிலையில் அதனை இந்தியா சமாளித்து வளர்ச்சி பாதையில் செல்கிறது.
- இறக்குமதியை நம்பியிருந்த காலம் மாறி இந்தியா தற்போது ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது.
இந்தியா முழுவதும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு 18 மாதங்களுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் அறிவித்து இருந்தார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ரெயில்வே, அஞ்சல் துறை, தொலை தொடர்பு துறை, சுரங்கம், எண்ணை கழகம் உள்பட 300-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன.
இந்த துறைகளில் புதிதாக 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக 75 ஆயிரம் பேருக்கு தீபாவளி பரிசாக இன்று பிரதமர் மோடி பணி ஆணைகளை வழங்கினார்.
ரோஜ்கர் மேளா என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பிரதமர் மோடி பேசியதாவது:-
10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் கடந்த 8 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு, சுய வேலைவாய்ப்புக்கான அரசின் முயற்சிகளில் முக்கியமான மைல்கல். இன்று 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
100 ஆண்டுக்கால வேலையின்மை மற்றும் சுய வேலைவாய்ப்பு பிரச்சினையை 100 நாட்களில் தீர்க்க முடியாது.
கொரோனா காலத்தில் சிறு, குறு தொழில் துறைக்கு ரூ. 3 லட்சம் கோடிக்கு மத்திய அரசின் உதவியால் 1.5 கோடிக்கும் அதிகமான வேலை இழப்புகள் தவிர்க்கப்பட்டது. உற்பத்தி, சுற்றுலா துறைகள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்த துறைகளை விரிவுபடுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது.
உலக நாடுகள் பொருளாதார சிக்கலில் தத்தளிக்கும் நிலையில் அதனை இந்தியா சமாளித்து வளர்ச்சி பாதையில் செல்கிறது. இளைஞர்கள் சொந்த தொழில் செய்ய பயிற்சி மற்றும் கடன் அளிக்கப்படுகிறது. கிராம புறங்களில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இறக்குமதியை நம்பியிருந்த காலம் மாறி இந்தியா தற்போது ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.