பிரதமர் மோடி இன்று முதல் 2 நாட்கள் குஜராத்தில் பிரசாரம்
- பிரதமர் மோடி நாளை 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
- பாவ்நகர், அம்ரேலி, ஜங்காபாத் ஆகிய மாவட்டங்களில் 4 பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.
அகமதாபாத்:
182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பா.ஜனதா தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அங்கு ஆட்சியை பிடிக்கும் வேட்கையில் காங்கிரஸ் உள்ளது. ஆம் ஆத்மி 3-வது அணியாக களத்தில் குதித்துள்ளது.
பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 6-ந்தேதி பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார். வல்சாத் மாவட்டம் கபர்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். பாவ் நகரில் பிரமாண்ட திருமண நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி 2-வது முறையாக குஜராத் செல்கிறார். இன்று முதல் 2 நாட்கள் அவர் பிரசாரம் செய்கிறார்.
மோடி இன்று காலை அருணாச்சல பிரதேசத்தில் முதல் பசுமை விமான நிலையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி சென்று நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கிருந்து அவர் புறப்பட்டு குஜராத் செல்கிறார்.
இன்று மாலை 6.30 மணிக்கு வல்சாத் மாவட்டம் ஜூவா கிராமத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
பிரதமர் மோடி நாளை 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். பாவ்நகர், அம்ரேலி, ஜங்காபாத் ஆகிய மாவட்டங்களில் 4 பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.