மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் கர்ப்பிணிக்கு பிரசவம்- டாக்டர்கள் அலட்சியமாக இருந்ததாக புகார்
- வாலாபாயை ஆஸ்பத்திரிக்குள் அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் மற்றும் வார்டு ஊழியர்கள் கூட அங்கு இல்லை.
- மருத்துவமனை ஊழியர்கள் ஒரு ஸ்ட்ரெச்சரை கொண்டு வந்து வாலாபாய் மற்றும் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.
போபால்:
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷிவ்புரி பகுதியை சேர்ந்தவர் அருண்பரிஹார். இவரது மனைவி வாலாபாய் கர்ப்பமாக இருந்தார்.
நேற்று வாலாபாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அருண் பரிஹார் மருத்துவ உதவிக்காக அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் எதுவும் வரவில்லை.
எனவே வேறு வாகனத்தில் ஏற்றி அப்பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார மையத்திற்கு அவரது மனைவியை அழைத்து சென்றார். ஆனால் அங்கும் போதிய ஊழியர்கள் இல்லை என கூறப்படுகிறது.
வாலாபாயை ஆஸ்பத்திரிக்குள் அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் மற்றும் வார்டு ஊழியர்கள் கூட அங்கு இல்லை. இதனால் ஆஸ்பத்திரி முன்பு வளாகத்திலேயே வாலாபாய்க்கு பிரசவமாகி பெண் குழந்தை பிறந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு கூட்டம் திரண்டது.
பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் ஒரு ஸ்ட்ரெச்சரை கொண்டு வந்து வாலாபாய் மற்றும் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அருண் பரிஹார் கூறுகையில், மருத்துவமனையில் ஊழியர்கள் அலட்சியமாக இருந்தனர்.
டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சுற்றி இருந்த நிலையிலும் யாரும் உதவிக்கு வரவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.