இந்தியா

ஆந்திராவில் தண்டவாளத்தில் வீடியோ எடுத்த மாணவர் ரெயில் மோதி பலி

Published On 2023-05-06 05:39 GMT   |   Update On 2023-05-06 05:39 GMT
  • லிங்கம் பள்ளியில் இருந்து சனாத் நகர் நோக்கி வந்த எம்.எம்.டி.எஸ். ரெயில் முகமது சர்ப்ராஸ் மீது மோதியது.
  • முகமது சர்ப்ராஸ் தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஸ்ரீ ரமணாகர் பகுதியை சேர்ந்தவர் முகமது சாதிக். இவரது மகன் முகமது சர்ப்ராஸ் (வயது 18). கொரோனா ஊரடங்கு காலத்தில் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.

உள்ளூர் மதரஸா ஒன்றில் இஸ்லாமிய கல்வி படித்து வந்தார். நேற்று காலை தன்னுடன் படிக்கும் நண்பர்கள் 2 பேருடன் சனாத் நகர் ரெயில் நிலையம் அருகே உள்ள பாப்புகுடா பகுதிக்கு சென்றனர். சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் நடந்து செல்வதுபோல வீடியோ எடுக்க நண்பர்களுக்கு கூறினார்.

அதன்படி முகமது சர்ப்ராஸ் நடனம் ஆடியபடி தண்டவாளத்தில் நடந்து சென்றார்.

இதனை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் லிங்கம் பள்ளியில் இருந்து சனாத் நகர் நோக்கி வந்த எம்.எம்.டி.எஸ். ரெயில் முகமது சர்ப்ராஸ் மீது மோதியது.

இதில் முகமது சர்ப்ராஸ் தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சனாத் நகர் ரெயில்வே போலீசார் முகமது சர்ப்ராஸ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் மீது ரெயில் மோதிய காட்சி அவரது நண்பர்கள் செல்போனில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News