இந்தியா

அதிக நிதி வருவாய் வழங்கும் தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்- பாராளுமன்றத்தில் திருமாவளவன் வலியுறுத்தல்

Published On 2022-12-13 13:16 GMT   |   Update On 2022-12-13 13:16 GMT
  • கோதாவரி, பெண்ணாறு, காவிரி இணைப்பு திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வலியுறுத்தினார்
  • வறுமை ஒழிப்பு திட்டம் என்பது முற்றாக இந்த அரசின் செயல் திட்டத்திலே இல்லை என்பது தெரியவருகிறது.

புதுடெல்லி:

மக்களவையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

இந்திய அரசு, மதுரையில் எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும் என்று அறிவிக்க வேண்டும். நிதி பகிர்வு செய்வதில் பதினைந்தாவது நிதிக்குழு மாநிலங்களுக்கு எவ்வாறு நிதியை பகிர்வது என்பதை குறித்து ஒரு வரையறையை தீர்மானித்து இருக்கிறது.

2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை அடிப்படையில் நிதி பகிர்வு செய்வது என்கிற வரையறையால் தமிழ்நாடு பாதிப்புகுள்ளாகி இருக்கிறது. ஏனெனில் தமிழ்நாடு தான் இந்திய ஒன்றிய அரசின் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை மிக சரியாக நடைமுறைப்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்கிறது. ஒப்பிட்டளவிலே உத்தரபிரதேசத்தில் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் அங்கு மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்திய அரசாங்கத்தினுடைய குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை மிக சரியாக நடைமுறைப்படுத்திய மாநிலங்களுள் தமிழ்நாடு முதன்மையான மாநிலம். அதனால் மக்கள் தொகை ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

இந்த மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து ஒரு வரையறையாக வைத்து நிதி பகிர்வு என்கிற நிலையை கையாள்வதால் தமிழ்நாடு பாதிக்கப்படுகிறது.

எனவே அதிக நிதி வருவாயை வழங்குகிற தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒன்றிய அரசு முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து டிபென்ஸ் காரிடாருக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக ஒன்றிய அரசு உறுதியளித்திருக்கிறது. தமிழ்நாட்டிலே ஏற்கனவே ஆவடியில் டாங்கி தொழிற்சாலை இருக்கிறது, அதை விரிவுபடுத்த வேண்டும். அதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்த ஒன்றிய அரசு இதுவரை பட்ஜெட்டில் மிக குறைவான முறையில் அளித்துள்ளது.

ஒவ்வொரு முறையும் நதிகள் இணைக்கப்படும் என்கிற வாக்குறுதி அளிக்கப்படுகிறது. கோதாவரி, பெண்ணாறு, காவிரி இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட ஒன்று ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அந்த நிதியை ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே நான் வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

வறுமை ஒழிப்பு திட்டம் என்பது முற்றாக இந்த அரசின் செயல் திட்டத்திலே இல்லை என்பது தெரியவருகிறது. கடந்த 2020ம் ஆண்டிலே 4.6 கோடி பேர் வறுமையில் புதிதாக தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதற்கு இந்திய அரசின் தவறாக பொருளாதார கொள்கை தான் காரணம் என்பது தெரியவருகிறது. இந்தியாவில் உள்ள பெரிய பணக்காரர்களில் 98 பணக்காரர்களின் சொத்து வரியிலே 4 சதவீதம் உயர்த்தினால் இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டத்தை 17 ஆண்டுகள் நடத்த முடியும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. எனவே அவர்களுக்கான வெல்த் டாக்ஸை குறைக்காமல் வரியை வசூலிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சென்னை மதுரைக்கு இடையில் வந்தே பாரத் ரெயில் விட வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Tags:    

Similar News