50 துண்டுகளாக வெட்டிக் கொல்லபட்ட பெங்களூரு பெண் வழக்கில் திருப்பம் - முக்கிய குற்றவாளி மர்ம மரணம்
- பிரேதப் பரிசோதனையில் கொடூரமான ஆயுதத்தால் மகாலட்சுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
- மகாலட்சுமியின் இறப்புக்குப் பின்னர் அவர் தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
கர்நாடக மாநிலம் வயாலிகாவல் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த மகாலட்சுமி (24) என்ற இளம்பெண்ணின் உடல் கடந்த சனிக்கிழமை வீட்டின் பிரிட்ஜில் இருந்து 50 துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் கொடூரமான ஆயுதத்தால் மகாலட்சுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
கணவன் வெளியூரில் வேலை பார்த்து வந்த நிலையில் பெங்களூரில் மகாலட்சுமி பணியாற்றி வரும் மாலில் ஆண்கள் அழகு நிலையத்தில் வேலைப்பார்த்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முக்தி ரஞ்சன் ரே என்ற 30 வயது நபர் அவரை தினமும் அழைத்துச் சென்று வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இருவரும் காதல் உறவில் இருந்ததாக அவர்களுடன் வேலை பார்த்து வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாலட்சுமியின் இறப்புக்குப் பின்னர் அந்த நபர் தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். இந்த கொலையில் முக்தி ரஞ்சன் ரே முக்கிய குற்றவாளியாக இருந்து வரும் நிலையில் ஒடிசாவில் உள்ள பத்ராக் [Bhadrak] மாவட்டத்தில் துசுரி [Dhusuri] காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் முக்தி ரஞ்சன் ரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் உயிரிழப்பு தொடர்பாக அம்மாநில காவல்துறையினர் பெங்களூரு போலீசுக்கு தகவல் அளித்தனர். அவரது மரணம் தற்கொலையாக அல்லது இருவரையும் கொலை செய்தது வெறு ஒருவரா என்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காமல் உள்ளது.