மாநிலங்களவையில் மணிப்பூர் பற்றி பேசிய பிரதமர் மோடி
- மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
- மாநிலத்தின் அதிகமான இடங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மணிப்பூரில் வன்முறை இன்னும் முற்றிலுமாக ஓயவில்லை. பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து வாய் திறப்பதில்லை. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தன.
நேற்று மக்களவையில் பிரதமர் மோடி பேசும்போது, மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். "Save Manipur" எனத் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.
இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கி பிரதமர் மோடி பேசினார்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
மாநில அரசு மற்றும் மற்றவர்களுடன் சேர்ந்து மத்திய அரசு மணிப்பூரில் அமைதியை கொண்டு வர பணியாற்றி வருகிறது. மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மாநிலத்தின் அதிகமான இடங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. முற்றிலும் அமைதி திரும்புவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகிறது.
வன்முறை தொடர்பாக 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மணிப்பூர் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டிருக்கும்போது, மத்திய அரசு இரண்டு தேசிய பேரிடர் குழுவின் இரண்டு அணிகளை மணிப்பூருக்கு அனுப்பி வைத்தது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.