வக்பு மசோதா அரசியலமைப்பு மீதான தாக்குதல்.. சிறுபான்மையினரை அரக்கர்களாக சித்தரிக்க முயற்சி - காங்கிரஸ்
- சமூக நல்லிணக்கத்தை சேதப்படுத்தும் பாஜகவின் தொடர்ச்சியான முயற்சிகளில் இதுவும் ஒன்று.
- சிறுபான்மையினரை அரக்கர்களாக சித்தரிக்க பாஜக முயற்சி.
வக்பு வாரிய திருத்த மசோதாவை அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் கடுமையாக சாட்டியுள்ளது. சிறுபான்மை சமூகங்களை அரக்கர்களாக சித்தரிக்கும் பாஜகவின் முயற்சிகளின் ஒரு பகுதி தான் இது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இன்று டெல்லியில் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பியும் தேசிய செய்திதொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 2024 இல் பாஜக கொண்டு வந்த வக்பு திருத்த மசோதா, தீவிரமான குறைபாடுகளை உடையது. இந்த மசோதா, மதங்களைக் கடந்து அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசியலமைப்பு விதிகளை நீர்த்துப்போகச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தவறான பிரச்சாரத்தைப் பரப்புவதன் மூலமும், பாரபட்சங்களை உருவாக்குவதன் மூலமும் சிறுபான்மை சமூகங்களை அரக்கத்தனமாக சித்தரிக்க முயற்சிக்கும் பாஜவின் உத்தியின் ஒரு பகுதியாகும்.
நமது தனித்துவமான பல மத சமூகத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான சமூக நல்லிணக்கத்தை சேதப்படுத்தும் பாஜகவின் தொடர்ச்சியான முயற்சிகளில் இதுவும் ஒன்று.
தேர்தல் ஆதாயங்களுக்காக நமது சமூகத்தை நிரந்தர பிளவு நிலையில் வைத்திருக்க சிறுபான்மை சமூகங்களின் மரபுகள் மற்றும் நிறுவனங்களை சீர்குலைக்கும் முயற்சி இது.
வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக முந்தைய சட்டங்களால் உருவாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்கள், அமைப்பு, அந்தஸ்து மற்றும் அதிகாரம் குறைக்கப்பட்டு, சமூகம் அதன் சொந்த மத மரபுகள் மற்றும் விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை வேண்டுமென்றே இந்த மசோதா மூலம் பறிக்கப்படுகிறது.
வக்பு நிர்வாகத்தை பலவீனப்படுத்துவதற்காகவே தற்போதுள்ள சட்டத்தில் உள்ள விதிகள் எந்த காரணமும் இல்லாமல் நீக்கப்படுகின்றன. வக்பு நிலங்களை ஆக்கிரமித்தவர்களைப் பாதுகாக்க சட்டத்தில் இப்போது அதிக பாதுகாப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அடிப்படையில், வக்பு திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று தெரிவித்துள்ளார். நடப்பு பாரளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழல் காங்கிரஸ் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது.