ரேவண்ணாவை நாடு திரும்புமாறு குமாரசாமி வேண்டுகோள்
- போலீசார் பிரஜ்வல் ரேவண்ணா தேடப்படும் நபராக அறிவித்து உள்ளனர்.
- எங்களது குடும்பத்தினரின் தொலைபேசிகளை அரசு ஒட்டு கேட்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதை அடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
ஆபாச வீடியோ குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் பிரஜ்வல் ரேவண்ணா தேடப்படும் நபராக அறிவித்து உள்ளனர். மேலும் அவரை கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்டும் பிறப்பித்தது. ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் உள்ளார் என்று தெரியாமல் விசாரணை அதிகாரிகள் உள்ளனர்.
இதற்கிடையே மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி, பிரஜ்வலுக்கு வேண்டுகோள் விடுத்து கூறியதாவது:-
எனது சகோதரர் ரேவண்ணா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்யும் தொழில் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொடர்பான புகாரில் தவறு செய்யவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும். எனவே அவர் உடனடியாக இந்தியாவுக்கு திரும்பி வந்து சிறப்பு புலனாய்வு குழு முன்பு நேரில் ஆஜர்ஆகி குடும்ப மானத்தை காப்பாற்ற வேண்டும். மேலும் எங்களது குடும்பத்தினரின் தொலைபேசிகளை அரசு ஒட்டு கேட்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
குமாரசாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய சிறப்பு விசாரணை குழுவினர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.