30 ரூபாய் 'டீ' க்காக துப்பாக்கியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்
- சில்லறை தட்டுப்பாடு காரணமாக டீக்கடை உரிமையாளருக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
- ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த கை துப்பாக்கியை எடுத்து ரகுநாதனின் நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டு விடுவதாக மிரட்டினார்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த சைதராபாத் பகுதியில் ரகுநாதன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். ரகுநாதன் டீக்கடைக்கு 3 வாலிபர்கள் டிப் டாப் உடை அணிந்து வந்தனர். அவர்கள் 3 பேரும் டீ குடித்தனர்.
பின்னர் அதில் இருந்த வாலிபர் ஒருவர் 2 ஆயிரத்தை ரகுநாதனிடம் கொடுத்தார். அதற்கு அவர் தன்னிடம் ரூ.2 ஆயிரத்திற்கு சில்லறை இல்லை என்றார். ரூ. 30 மட்டும் தர வேண்டும் என கூறினார்.
சில்லறை தட்டுப்பாடு காரணமாக டீக்கடை உரிமையாளருக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த கை துப்பாக்கியை எடுத்து ரகுநாதனின் நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டு விடுவதாக மிரட்டினார்.
மற்றொரு வாலிபர் கத்தியை எடுத்து ரகுநாதனின் மார்பில் குத்தி விட்டு அங்கிருந்து 3 பேரும் பைக்கில் தப்பி சென்றனர்.
இது குறித்து ரகுநாதன் சைதராபாத் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
இது சம்பந்தமாக சைதராபாத் உசேன் அஷலம் பகுதியை சேர்ந்த முகமது உஸ்மான், யான் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 30 ரூபாய் "டீ" க்காக துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் ஐதராபாத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.