புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் 35 கிராமங்களை சேர்ந்த 3 லட்சம் மக்கள் பாதிப்பு
- 90 தேசிய பேரிடர் மீட்பு படையினர், 140 ராணுவ வீரர்கள், 4000 அரசு ஊழியர்கள் 4-வது நாளாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
- 500-க்கும் மேற்பட்ட மரங்கள், 400 மின் கம்பங்கள, 55 படகுகள் சேதமாகி உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புயலால் 35 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 தேசிய பேரிடர் மீட்பு படையினர், 140 ராணுவ வீரர்கள், 4000 அரசு ஊழியர்கள் 4-வது நாளாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 30 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி முழுவதும் உள்ள 208 முகாம்களில் 15 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர். இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அவர்கள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 361 பேர் புயல் வெள்ளத்தில் சிக்கி காயமடைந்தனர்.
கனமழைக்கு 5 பசு மாடுகள், ஒரு எருமை மாடு, 29 கன்றுகள், 8 ஆடுகள் இறந்துள்ளது. கோழி, வாத்து உள்ளிட்ட 5 ஆயிரம் பறவைகள் இறந்துள்ளன. புதுச்சேரியில் மட்டும் நெற்பயிர், வாழை, மணிலா, காய்கறி என 5 ஆயிரத்து 527 ஹெக்டேர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது.
500-க்கும் மேற்பட்ட மரங்கள், 400 மின் கம்பங்கள, 55 படகுகள் சேதமாகி உள்ளது. 27 வீடுகள் முழுமையாகவும், 10 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 200 குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
இதுதவிர 12 பள்ளி கட்டிடங்கள், 4 கல்லூரி கட்டிடங்கள், 9 ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள், 4 மாட்டு கொட்டகைகளும் சேதமடைந்துள்ளன.
இதுவரை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் 3 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அரசியல் கட்சி பிரமூகர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது
இவை புதுச்சேரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் துறையின் முதல் கட்ட சேத மதிப்பீட்டில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.