வெள்ளத்தில் தத்தளிக்கும் புதுச்சேரி கிராமங்கள்: சாலைகள் துண்டிப்பு-போக்குவரத்து பாதிப்பு
- சங்கராபரணி ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த 3 கோழிப்பண்ணைகள் நீரில் மூழ்கியது.
- சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியை ஃபெஞ்சல் புயல் தாக்கி கோர தாண்ட வம் ஆடியது.
சூறை காற்றுடன் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செ.மீ. கனமழை பெய்ததால் புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள சாலைகள், வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மறுநாள் மழை பெய்யாததால் தேங்கிய நீர் நகர பகுதியில் வடிய தொடங்கியது.
நேற்று முதல் நகர பகுதியில் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது. அதே நேரத்தில் கிராமப்பகுதிகளில் வயல்வெளி, வீடுகளில் புகுந்த மழைநீர் வெளியேறவில்லை. இதை வெளியேற்றும் பணி நடந்து வந்தது. இதனிடையே புயல் புதுச்சேரியை கடந்து தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் நுழைந்தது. செல்லும் இடமெல்லாம் 50 செ.மீ. மழையை கொட்டியபடி சென்றது.
இதனால் தமிழகத்தில் உள்ள வீடூர், சாத்தனூர் அணைகள் நிரம்பியது. இந்த அணைகளை திறந்துள்ளனர். 2 அணைகளில் இருந்தும் பல ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வீடூர் அணை வெள்ளம் புதுச்சேரி சங்கராபரணி ஆற்றின் வழியாகவும், சாத்தனூர் அணை வெள்ளம் புதுச்சேரி தென்பெண்ணை ஆற்று வழியாகவும் கடலில் கலக்கும்.
திடீரென 2 அணைகளிலும் பல ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டதால் ஆற்றின் இருபுறமும் உள்ள கரையோர கிராமங்களில் நீர் புகுந்தது. தென்பெண்ணை ஆற்றின் வெள்ளத்தால் புதுச்சேரி, கடலூர் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து வருகிறது. மழை நின்றாலும், அணை திறப்பால் புதுச்சேரி கிராம மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.
தென்பெண்ணையாற்று வெள்ளத்தால் புதுச்சேரியின் பாகூர், இருளஞ்சந்தை, குருவிநத்தம், சோரியாங்குப்பம், கொமந்தான்மேடு, ஆராய்ச்சிக்குப்பம் கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம், உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை, போலீசார், இளைஞர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்தனர்.
மீட்பு பணிகளை செந்தில் குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டு உணவு பொருட்களை வழங்கினார். பாகூர் ஏரிக்கு அதிக நீர் வருவதால் உடையும் அபாயம் நிலவுகிறது. புதுச்சேரி- கடலூர் சாலையில் கங்கணாங்குப்பத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, நாகை புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது.
பாகூர் பகுதி வெள்ள பாதிப்புகளை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் தனித்தனியே ஆய்வு செய்து ஆறுதல் கூறினர்.
சங்கராபரணி ஆற்றின் வெள்ளப்பெருக்கால் மணலிப்பட்டு, கூனிச்சம் பட்டு கிராமங்களுக்கு இடையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கொடுக்கூர், திருவக்கரை செல்லும் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சங்கராபரணி ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த 3 கோழிப்பண்ணைகள் நீரில் மூழ்கியது. சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
அணைகள் திறப்பு குறித்து புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
52 ஆண்டுக்கு பின் தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 76 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தாலும், பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியிலிருந்து மேலும் ஒரு லட்சத்து 24 ஆயிரம் கன அடி தண்ணீர் என மொத்தமாக வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் பெண்ணையாறில் வருகிறது.
இதனால், புதுச்சேரி கிராமப்புற பகுதியான கொமந்தான்மேடு, பெரிய ஆராய்ச்சிக்குப்பம், மணமேடு, கரையாம்புத்தூர், கடுவனூர், பாகூர், பரிக்கல் பட்டு, சோரியாங்குப்பம், குருவிநத்தம், ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இக்கிராமங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை குறைந்து இருப்பதால் ஆற்றில் செல்லும் தண்ணீர் குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கையாக கடந்த 27-ந்தேதி முதல் புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று 3-ந்தேதி பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.
பின்னர் முதல்-அமைச்சருடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தினார். வீடூர், சாத்தனூர், அணைகள் திறப்பால் கிராமப்புற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படுவதால் பாதுகாப்பு கருதி, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று 3-ந்தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அறிவித்தனர்.