புதுச்சேரி

சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க வேண்டும்- மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம்

Published On 2024-12-04 05:27 GMT   |   Update On 2024-12-04 05:27 GMT
  • சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதால் மிகுந்த துயரத்திலும் மனவேதனையிலும் உள்ளனர்.

புதுச்சேரி:

ஃபெஞ்சல் புயல் காரணமாக ஒரு வாரமாக தொழிலுக்குச் செல்லாமல் இருந்த புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்ட மீனவர்கள், டிசம்பர் 1-ந்தேதி மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

அதுபோல் காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த பால்மணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், பால்மணியின் சகோதரர் கலைமணி மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன், சுதின், பொன்னையன், ராமன், பூவரசன், மாணிக்கவேலு, ஆகாஷ், சக்திவேல், வினித் குமார், கமலேஷ், சிவக்குமார், ஜெயமணி, மோகன்குமார், ஆறுமுகம் (காரைக்கால்மேடு), நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மணி, ரத்தினவேலு, மயிலாடுதுறை செல்வநாதன் ஆகிய 18 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்றனர்.

கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 18 மீனவர்கள் சிறைபிடித்து விசைபடகை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் காரைக்கால் மீனவர்களை மீட்க கோரி முதல்-அமைச்சர் ரங்கசாமி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுச்சேரி காரைக்கால் பிராந்தியத்தில் இருந்து எந்திரப்படகில் 15 காரைக்கால் மீனவர்கள் மற்றும் 3 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகை கைப்பற்றி மீனவர்களை சிறைபிடித்து காவலில் வைத்துள்ளனர்.

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் டெல்லியில் மத்திய மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து வைத்திலிங்கம் எம்.பி. அளித்த மனுவில், காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதால் மிகுந்த துயரத்திலும் மனவேதனையிலும் உள்ளனர். மீனவர்களுடன் மீன்பிடி படகை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News