புதுச்சேரி

புதுச்சேரியில் எம்.எல்.ஏ.வை மிரட்டிய ரவுடி கைது

Published On 2024-11-14 05:16 GMT   |   Update On 2024-11-14 05:16 GMT
  • சிவசங்கர் எம்.எல்.ஏ. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார்.
  • போலீசார் ரவுடி ராமு மீது மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி உழவர்கரை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., சிவசங்கர். இவர் புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சேர்மன் பதவி வகித்து வருகிறார்.

இதற்கிடையே புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரி எதிரில் உள்ள உழவர்கரை நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் திலாஸ் பேட்டையை சேர்ந்த ரவுடி ராமு சில கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் தாண்டி ஆக்கிரமித்து கடை நடத்துவதால் மற்ற வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, சிவசங்கர் எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து சிவசங்கர் எம்.எல்.ஏ. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதை அறிந்த ரவுடி ராமு சிவசங்கர் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு நேரடியாக சென்று ஜிப்மர் கடை விவகாரத்தில் தலையிட்டால் விபரீதத்ததை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து சிவசங்கர் எம்.எல்.ஏ. ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ரவுடி ராமு மீது மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர்.

ரவுடி ராமுவை கைது செய்ய வலியுறுத்தி ஒட்டு மொத்த வியாபாரிகள் சங்கத்தினரும் பேரணியாக சென்று கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரிடம் மனு அளித்தனர்.

நேற்று முன்தினம் சரணடைந்து ஜாமீன் பெற ரவுடி ராமு புதுச்சேரி கோர்ட்டுக்கு வந்தார். ஆனால் எம்.எல்.ஏ.வை மிரட்டிய வழக்கு என்பதால் ரவுடி ராமுவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இதனால் கோர்ட்டில் இருந்து ரவுடி ராமு தப்பியோடி விட்டார். அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் நேற்று ரவுடி ராமுவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News