விஜயுடன் முதலமைச்சர் ரங்கசாமி கூட்டணியா?- அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
- புதுவையில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
- முதலமைச்சர் ரங்கசாமியும், த.வெ.க. தலைவரும் கூட்டணி குறித்து அறிவிக்கட்டும், அதன்பிறகு பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை சொல்லும்.
புதுச்சேரி:
த.வெ.க. தலைவர் விஜய்க்கும், புதுவை மாநில முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமிக்கும் இடையே வயதை தாண்டிய புரிதலும், நட்பும் உள்ளது.
விஜய் கட்சி தொடங்கும் முன்பும், மாநாட்டுக்கு முன்பும் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியிடம் சில ஆலோசனைகளை பெற்றதாக கூறப்படுகிறது.
இதனால் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதுவையில் த.வெ.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதுவையில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக புதுவை பா.ஜ.க. அமைச்சர் நமச்சிவாயத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கூட்டணி அமைப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி அல்லது த.வெ.க. தலைவர் விஜய் ஏதாவது கூறியுள்ளார்களா? பொதுவாக தேர்தல் குறித்து மக்களிடம் பல்வேறு கருத்துக்கள், எதிர்பார்ப்புகள் நிலவுவது வழக்கம். அது பொய்யாகவும் இருக்கலாம், உண்மையாகவும் இருக்கலாம்.
அந்த கருத்து யார் வாயால் கூறப்படுகிறது என்பதுதான் முக்கியம். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் கூறினால்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலமைச்சர் ரங்கசாமியும், த.வெ.க. தலைவர் விஜயும் கூட்டணி குறித்து அறிவிக்கட்டும், அதன்பிறகு பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை சொல்லும். வதந்திகளுக்கு பதில் கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.