போலீஸ் நிலையத்தில் இளம்பெண் ஆசிட் குடித்ததால் பரபரப்பு
- போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் அவரது தாய் முன்னிலையில் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- வெளியே வந்த அந்த இளம்பெண் திடீரென வாந்தி எடுத்தார்.
புதுச்சேரி:
கும்பகோணத்தைச் சேர்ந்த 24 வயது என்ஜினீயரிங் பட்டதாரி பெண். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தனியார் விடுதியில் தங்கி சுத்துக்கேணியில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 11-ந் தேதி இரவு விடுதியில் இருந்து வெளியேறிய அவர் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து பெண்ணின் பெற்றோருக்கு விடுதி நிர்வாகம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் கோரிமேடு போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை தேடி வந்தனர். அந்த பெண் மதுரைக்கு சென்றிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் செல்போனில் பேசி போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் அவரது தாய் முன்னிலையில் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது இளம்பெண் கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் இளம்பெண் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெண் போலீசார் கழிவறை கதவை தட்டி அந்த பெண்ணை வெளியே வர செய்தனர். அப்போது வெளியே வந்த அந்த இளம்பெண் திடீரென வாந்தி எடுத்தார்.
விசாரணையில் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை இளம்பெண் குடித்தது தெரிய வந்தது. மாயமானது குறித்து தாய் முன்பு போலீசார் விசாரணை நடத்தியதால் அவமானத்தில் ஆசிட் குடித்ததாக அந்த இளம்பெண் கூறினார்.
இதையடுத்து போலீஸ் வாகனம் மூலம் அவரை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணையின்போது, இளம்பெண் ஆசிட் குடித்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.