விடுதலை நாள் விழா: அரசு அலுவலகத்தில் திருநங்கையை தேசியக் கொடி ஏற்ற வைத்து சிறப்பித்த கலெக்டர்
- புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
- திருநங்கை பூமிகா, தங்களுக்கு இந்த வாய்ப்பை அளித்த காரைக்கால் மாவட்ட கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. காரைக்காலில் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு குடிமைப் பொருள் வழங்கல் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை என 20க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் காமராஜர் அரசு வளாக கட்டிடத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
வழக்கமாக அதிகாரிகள் தேசியக் கொடி ஏற்றும் நிலையில், இந்த ஆண்டு முதல் முறையாக காரைக்கால் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அவர்களது உத்தரவின் பேரில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பூமிகா என்ற திருநங்கை, தேசியக் கொடி ஏற்றி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் கலந்துகொண்டு திருநங்கை பூமிகாவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் திருநங்கை பூமிகா, தங்களுக்கு இந்த வாய்ப்பை அளித்த காரைக்கால் மாவட்ட கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்.