புதுச்சேரி

வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை- திருமாவளவன்

Published On 2024-11-18 02:32 GMT   |   Update On 2024-11-18 02:32 GMT
  • அ.தி.மு.க. கூட்டணி அழைப்பதாக அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணி இணைந்து செயல்பட்டு உள்ளது.

புதுச்சேரி:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. புதுச்சேரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தை கட்சியினர் உட்கட்சி விவகாரங்களை சமூக வலை தளங்களில் வெளியிட வேண்டாம். இதனால் கட்சி வளர்ச்சிக்கு தடை ஏற்படுகிறது. இக்கட்சி அனைத்து விளிம்பு நிலை மக்களுக்காக போராடும் சமூக பண்பாட்டு தளத்தை இயக்கும் இயக்கமாக உள்ளது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று தி.மு.க. அல்லது அ.தி.மு.க. சொல்கிறது என்றால், அது நடைமுறைக்கு சாத்தியமானது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் தங்கள் விருப்பத்தை சொல்வது தற்போதைய சூழலில் சாத்தியமானதா? என்ற கேள்வி எழுகிறது. 2026-ல் வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை. இப்போது தான் கூட்டணி தொடக்கப் புள்ளியாக உள்ளது. எனவே வரும் தேர்தலில் காலம் கனியும் என்றும் சொல்ல முடியாது.

அ.தி.மு.க. கூட்டணி அழைப்பதாக அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. கட்சியில் விவாதித்தார்களா? என்ற தகவல் இல்லை. யூகத்தின் அடிப்படையில் எதையும் சொல்லிவிட முடியாது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணி இணைந்து செயல்பட்டு உள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதிலும், இந்தியா கூட்டணியை உருவாக்கியதிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பங்கு உண்டு. அந்த கூட்டணியை மாநில அளவிலும், தேசிய அளவிலும் பாதுகாப்பதும், வலுப்படுத்துவது விடுதலை சிறுத்தைகளின் நோக்கமும், கடமைகளுள் ஒன்று. எங்கள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறாது. ஆனால், வெளியேறுவது போன்ற தோற்றத்தை சிலர் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News