புதுச்சேரி

5-வது நாளாக மழை: புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

Published On 2024-11-17 07:40 GMT   |   Update On 2024-11-17 07:40 GMT
  • தொடர் மழையால் தெருவோர சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
  • கட்டிட தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி போயினர்.

புதுச்சேரி:

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 12-ந் தேதி முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து பகலிலும், இரவிலும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இன்று 5-வது நாளாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று இரவு அவ்வப்போது கனமழை கொட்டியது. இன்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்தவாறே உள்ளது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. தற்காலிக பஸ் நிலையமான ரோடியர் மில் திடலில் மழை நீர் தேங்கியதால் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். புதுச்சேரியில் 5 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் தெருவோர சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

அதுபோல் கட்டிட தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி போயினர். தொடர் மழை காரணமாக புதுச்சேரியின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதுபோல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுபோல் வில்லியனூர், திருக்கனூர், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், மணிலா, மரவள்ளி, கரும்பு போன்றவை மழை நீரில் மூழ்கியுள்ளது.

Tags:    

Similar News