சிறப்புக் கட்டுரைகள்

வீரப்பறவை ஜடாயு

Published On 2024-08-16 09:31 GMT   |   Update On 2024-08-16 09:31 GMT
  • ஜடாயு ராமாயணத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக வருகிறது.
  • ராமனுக்காக உயிர்த்தியாகம் செய்த பறவை.

ஜடாயு என்கிற வீரக் கழுகு ராமாயணத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக வருகிறது. ராமனுக்காக யுத்த காண்டத்தில் நிறையப்பேர் உயிர் துறக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் முன்பாக முதன்முதலில் ராமனுக்காக உயிர்த்தியாகம் செய்த பறவை அது.

அலகிலா விளையாட்டு உடையானுக்காக, அவன் மனைவியைக் கவர்ந்த ராவணன் முகத்தில் அலகினால் விளையாடிய பறவை.

ராமன் ஜடாயுவின் நண்பரான தசரதரின் புதல்வன் என்பதே ஜடாயு ராமனிடம் பாசம் கொள்ளக் காரணம். தசரதர் ஜடாயு நட்பு எப்படி ஏற்பட்டது என்றொரு கதை உண்டு.

கோசலைக்கும் தசரதருக்கும் திருமணம் நடந்தால் பிறக்கும் குழந்தை மூலம் தான் வதம் செய்யப்படுவோம் என்ற ரகசியத்தை பிரம்மனிடமிருந்து அறிந்துவிடுகிறான் ராவணன். எனவே கோசலையைக் கவர்ந்து, தசரதர் பார்க்க இயலாதவாறு அவளை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டி நதியில் உருட்டி விடுகிறான்.

தசரதர் தற்செயலாகப் பெட்டியைப் பார்க்கிறார். பெட்டியின் உள்ளே என்ன இருக்கிறது என்றறிய ஆவல் கொண்டவராய்ப் படகில் பெட்டியைத் தொடர்ந்து செல்கிறார். பெட்டி நீரில் மிதந்தவாறே விலகி விலகிச் செல்கிறது. படகோட்டிய தசரதர் பெரிதும் களைப்படைகிறார்.

அப்போது மேலே பறந்து வருகிறது ஜடாயு. களைத்திருந்த தசரதரைப் பார்த்துப் பரிவுகொள்கிறது அது. தன் முதுகில் அவரை ஏற்றிக் கொண்டு நீரில் மிதந்து செல்லும் பெட்டியைத் தொடர்ந்து வானில் பறந்து செல்கிறது. பெட்டி கரை ஒதுங்கிய இடத்தில் தசரதரை ஜடாயு இறக்கி விடுகிறது.

பெட்டியைத் திறந்தால் உள்ளே கோசலை! அவள் மலங்க மலங்க விழித்தவாறே பெட்டியை விட்டுக் கீழே இறங்குகிறாள். அங்கே தோன்றுகிற நாரதர் அவர்களுக்குத் திருமால் மகனாகப் பிறக்கப் போகிற விஷயத்தைச் சொல்லி, இருவருக்கும் ஜடாயு சாட்சியாகத் திருமணம் செய்துவைக்கிறார்.

தான் மணம் செய்துவைத்த தசரதருக்கும் கோசலைக்கும் பிறந்த மைந்தன் என்பதால்தான் ராமன் மேல் ஜடாயுவுக்கு அலாதி பாசம்.

ராவணன் சிவனிடம் வரம்பெற்று வாங்கிய வாள் சந்திரஹாசம் என்கிற மகாசக்தி நிறைந்த வாள். அதுமட்டும் ராவணன் கையில் இருந்தால் ராமனால் அவனை வென்றிருக்க முடியாது.

ஆனால் அந்த அபூர்வமான வாளை அவனுக்குத் தந்தபோது சிவன் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார். போர் தர்மப்படிப் போர் செய்தால்தான் ராவணனிடம் வாள் நிலைத்திருக்கும். இல்லாவிட்டால் அவனை விட்டு அது விலகிச் சென்று விடும்.

ஜடாயுவுடன் போர்புரிந்து அதன் சிறகுகளைச் சந்திரஹாச வாளால் வெட்டிய பின் அசோக வனத்தில் சீதையை விட்டுவிட்டு மண்டோதரி இல்லம் தேடிப் போகிறான் ராவணன்.

மண்டோதரி, `பிரபே! போகும்போது சந்திரஹாச வாளை எடுத்துச் சென்றீர்களே? உங்கள் உயிரைக் காக்கும் வாள் அல்லவா அது? இப்போது அதைக் காணவில்லையே? அது எங்கே?` என்று கவலையோடு கேட்கிறாள்.

ராவணன் திகைக்கிறான். சந்திரஹாச வாள் அவனை விட்டு மறைந்து விட்டது! `அது எப்படி மறைந்தது, நான் போர் தர்மப்படித் தானே போர் செய்தேன்?` என்கிறான் ராவணன்.

அவன் ஜடாயுவுடன் செய்த போர் பற்றி அவனிடமே கேட்டறிந்த மண்டோதரி அவன் போர் தர்மப்படிப் போர் செய்யவில்லை என்ற உண்மையைத் துயரத்தோடு விளக்குகிறாள்.

ஆயுதத்தால் போர் செய்பவர்களை ஆயுதத்தால் தாக்கலாம். ஆனால் உடலால் தாக்குபவர்களை கை கால் முதலிய உறுப்புகளைக் கொண்டே தாக்க வேண்டும்.

ஜடாயு அதன் உடலின் உறுப்பான அலகால் தானே தாக்கியது? அப்படியானால் போர் தர்மப்படி ராவணனும் தன் உடல் உறுப்புகளால் தானே அதைத் தாக்கியிருக்க வேண்டும்? எப்படி ஆயுதமான வாளால் தாக்கலாம்?

போர் தர்மப்படிப் போர் நிகழ்த்தாததால்தான் சந்திரஹாச வாள் ராவணனை விட்டுச் சென்றுவிட்டது என்பதை மண்டோதரி வருத்தத்தோடு தெரிவித்தபோது அவள் மனம் மிகுந்த சோர்வடைகிறது.

என்றைக்கு ராவணனிடமிருந்து அந்த வாள் மறைகிறதோ அன்றிலிருந்து ராவணன் வீழ்ச்சி ஆரம்பம் என்ற ரகசியம் அவளுக்கு ஏற்கெனவே அவள் வழிபடும் சிவபெருமானால் சொல்லப் பட்டிருக்கிறது.

ராவண வதமே ராம அவதாரத்திற்கான நோக்கம். அதற்கு ராவணனை பலவீனப்படுத்துவது முக்கியம். சந்திரஹாச வாளை அவனிடமிருந்து அகற்றியதன் மூலம் ராவண வதத்திற்கான பிள்ளையார் சுழியைப் போட்ட பெருமை ஜடாயுவுக்கு உண்டு.

ராவணனால் சிறகுகள் முறிக்கப்பட்டு மண்ணில் சாய்ந்த ஜடாயு, ராமனின் வருகைக்காக உயிரைப் பிடித்துவைத்துக் கொண்டு காத்திருந்தது.

சீதையைத் தேடியவாறு ராம லட்சுமணர்கள் ஜடாயு வீழ்ந்து கிடக்கும் பிரதேசத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

வழியில் வீணைக்கொடி ஒன்று சிதைவுற்றுக் கிடப்பதைக் கண்டார்கள். எனவே வீணையைக் கொடியாகக் கொண்ட அரக்கனின் தேர் அங்கு வந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

அரக்கனது வில் முறிந்து கிடப்பதையும் பார்த்தார்கள். அது ஜடாயு வாழும் பிரதேசமாகையால் ஜடாயுதான் தன் அலகால், வந்த அரக்கனின் வில்லை முறித்திருக்க வேண்டும் என்பதையும் யூகித்து அறிந்துகொண்டார்கள்.

அரக்கனின் அம்பறாத் துணி, கவசம் போன்றவையும் ஆங்காங்கே கீழே விழுந்து கிடந்ததைக் கண்டார்கள். திகைப்புடன் அதே பாதையில் தொடர்ந்து நடந்தார்கள். ஓர் இடத்தில் அரக்கனது குண்டலங்கள் சிதறிக் கிடப்பதையும் கூடக் கண்டார்கள்.

ஜடாயுவுக்கும் வந்த அரக்கனுக்கும் இடையே கடும் போர் நடந்திருக்கிறது என்பதற்கான சாட்சியங்கள் அவர்கள் கால்வைத்த இடங்களில் எல்லாம் தென்பட்டன.

ராம லட்சுமணர்கள் ஜடாயு எங்கே என்று அந்தக் கழுகைத் தேடிப் பாசத்தோடு ஓடினார்கள். அந்த வீரம் நிறைந்த கழுகு குற்றுயிரும் குலை உயிருமாக அவர்களின் வரவை எதிர்பார்த்துத் தன் சிறிய விழிகளைத் திறந்தவாறு மண்ணில் கிடந்தது.

ஜடாயுவின் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டான் ராமபிரான். நடைபெற்ற அனைத்தையும் மரணப் படுக்கையில் இருந்த ஜடாயுவிடம் முழுமையாகக் கேட்டு அறிந்தார்கள் ராம லட்சுமணர்கள்.

வந்தவன் பத்துத்தலை அரக்கன் என்பதையும் அவன் சென்ற வழி தென்திசை என்பதையும் அவர்களிடம் பெருமூச்சு வாங்கச் சொன்னது அந்தக் கழுகு. ஜடாயு இறக்கப் போகிற தருணம்.

ஜடாயு சொன்ன விவரங்களைக் கேட்ட ராமனுக்குச் சீற்றம் பொங்கியது. `இவ்வளவு நடந்திருக்கிறது, இந்த உலகம் சும்மா இருந்து விட்டதே? இந்த உலகை என்ன செய்கிறேன் பார்!` என அவன் வில்லை வளைத்தான்.

ஜடாயு நகைத்தது. உயிர் போகிற தறுவாயில் கூட, யாருக்காக உயிரை விடுகிறதோ அவரிடமே நியாயத்தை தைரியமாக எடுத்துச் சொல்ல அது மறக்கவில்லை.

`கொம்பிழை மானின் பின்போய்க் குலப்பழி தேடிக் கொண்டீர்! உம்பிழை என்பதல்லால் இதில் உலகுசெய் பிழை என்ன?` என்று ஜடாயு கேட்டதாக எழுதுகிறார் கம்பர்.

சீதையை அருகே இருந்து காப்பாற்றாமல் தவறு செய்துவிட்டு உலகைக் கோபிப்பது என்ன நியாயம் என்ற ஜடாயுவின் கேள்வி ராமன் நெஞ்சைச் சுட்டிருக்க வேண்டும். ராமன் தலை குனிந்தான். ஜடாயுவின் தலை மண்ணில் சாய்ந்தது...

அதன்பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் வியப்பளிப்பவை. மனித ராமன் பறவையான ஜடாயுவுக்கு ஈமக்கடன் செய்ய முற்பட்டான். மணலால் பெரிய மேடை அமைத்தான்.

லட்சுமணன் உதவியோடு சந்தனக் கட்டைகளைக் காட்டிலிருந்து வெட்டிவந்தான். மணல் மேடையின் மேல் நறுமணம் கமழும் அந்தக் கட்டைகளை அடுக்கினான்.

கானகமெங்கும் விளைந்திருக்கும் தருப்பைப் புல்லைப் பறித்து அந்தக் கட்டைகளின் மீது சமமாகப் பரப்பினான். அந்த தருப்பைப் படுக்கையின் மேல் வண்ண வண்ண மலர்களைப் பறித்து வந்து பரப்பி ஒரு மலர்ப் படுக்கை அமைத்தான்.

பின்னர் நதியிலிருந்து நீர் எடுத்துவந்து ஜடாயுவின் உடலை நீராட்டினான். அப்போது ராமன் விழிகளிலிருந்து பெருகிய நீரும் அந்த நதி நீரோடு சேர்ந்தே ஜடாயுவை நீராட்டியது.

தன் மனைவியைக் காப்பாற்றும் பொருட்டாகக் கடுமையாய்ப் போரிட்டு அந்தப் போரில் உயிரையே துறந்துவிட்ட அந்த வீரப் பறவையின் உடலை மெல்லத் தன் நீண்ட கரங்களால் பூப்போல அள்ளி எடுத்து, மலர்ப் படுக்கையில் கிடத்தின ராமனின் தாமரைப்பூங் கரங்கள்.

பின்னர் சந்தனம், மலர், நீர் முதலியவற்றை ஜடாயுவின் உடலின் மீது சொரிந்த ராமன் மந்திரங்களை உச்சரித்தவாறு, தன் தந்தைக்குக் கொள்ளி வைப்பதுபோன்ற நெகிழ்ச்சியுடன் ஜடாயுவின் உடலுக்குக் கொள்ளி வைத்தான். நெருப்பு கணகணவெனக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

ஒரு பறவைக்குக் கடவுளே கொள்ளி வைக்கும் பெரும்பேறு கிடைத்த மகத்துவத்தை எண்ணி வானிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் வியந்தார்கள்.

அதன்பின்னர் ராமனும் லட்சுமணனும் அருகேயிருந்த ஒரு காட்டாற்றில் குளித்தார்–கள். நதிக்கரையில் ராமன் ஜடாயுவுக்கு மிகுந்த பாசத்தோடு நீர்க்கடன் செய்தான்.

`நம் தந்தைக்கு நாம் செய்ய இயலாமல் போன ஈமக் கடனை நம் தந்தையை போன்ற ஜடாயுவுக்குச் செய்து நாம் ஆறுதல் அடைகிறோம் லட்சுமணா!` என ராமன் சொன்னபோது லட்சுமணன் விழிகளிலும் கரகர–வெனக் கண்ணீர், வெள்ளமாய்ப் பெருகியது.

பின்னர் ஒருவாறு தங்கள் மனத்தைத் தேற்றிக் கொண்டு அவர்கள் இருவரும் சீதையைத் தேடித் தொடர்ந்து நடக்கலானார்கள் என்கிறது ராமாயணம்.

ஒரு சிறிய பறவைப் பாத்திரமான ஜடாயுவை படிக்கும் நம் மனத்தில் பறந்துபோகாமல் நிலையாக நிற்கும்படிச் செய்துவிட்டது ராமாயணம்...

தொடர்புக்கு- thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News