சிறப்புக் கட்டுரைகள்

தாங்கிய வேர்களும் தனித்து ஒதுங்கும் விழுதுகளும்!

Published On 2024-10-01 09:30 GMT   |   Update On 2024-10-01 09:30 GMT
  • தன் தாய், தந்தையை புறக்கணிக்கும் இன்றைய தலைமுறை நாளை தனக்கும் அந்த நிலைதான் என்பதை உணர்வதேயில்லை.
  • முதியோர்களுக்கென்று மட்டுமே அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனைகளை ஊர்தோறும் அமைத்தல் வேண்டும்.

உலகளவில் இன்றைக்கு பெரிதாக பேசப்படாத ஒன்று உள்ளதென்றால் அது மூத்தோரை புறக்கணித்தல்தான். இன்றைய உலகம் மிகவும் கன்னாபின்னாவென்று மாற்றங்களைப் பார்த்து வருகிறது. மனிதம் என்பதையும் மனிதநேயம் என்பதையும் சல்லடை போட்டு தேடவேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.

தன்னலமாய் மனிதர்கள் வாழ்வது என்பது வீட்டில் இருக்கும் பெற்றோரை, தாத்தா பாட்டியை வெளியே அனுப்பிவிட்டு தன் வாழ்க்கைத் துணை, தன்குழந்தைகள் என்பதோடு சுருங்கி நிற்கிறது.

 

தாத்தா பாட்டிகளின் மடியில் கதைகள் கேட்டு வளர்ந்த தலைமுறைகள் எல்லாம் காணாமல் போய் தாத்தா பாட்டிகள் என்பவர்கள் எங்கோ தனியே வாழ்பவர்கள் அல்லது முதியோர் இல்லங்களில் இருப்பவர்கள் என்பதைத்தான் இன்றைய இளம்பிள்ளைகள் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பது எத்தனை வேதனை!

தன் தாய், தந்தையை புறக்கணிக்கும் இன்றைய தலைமுறை நாளை தனக்கும் அந்த நிலைதான் என்பதை உணர்வதேயில்லை.

இன்றைக்கு இருக்கும் சமூக பொருளாதார நிலை என்பது வேறு. இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சமூக பொருளாதார நிலை என்பது வேறு. இப்போது எல்லா நிலையிலும் வருவாய் என்பது மாறியுள்ளது. விலைவாசி அதிகரித்திருந்தாலும், வாங்கும் சக்தி என்பதும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அரசாங்கம் வழங்கும் சலுகைகளும் இப்போது அதிகம். ஆனால் வருவாய் குறைவாகவும், வேலைவாய்ப்புகள் அதிகமில்லாமலும் இருந்த காலகட்டத்தில் தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதற்காகவே தங்களுடைய முழு வாழ்க்கையையும் செலவழித்து தமக்கென்று எந்த சுகத்தையும் அனுபவிக்காத பெற்றோர் கள்தான் இன்றைக்கு அதே பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதரவாக அல்லல்படுகின்றனர்.

கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்று பொருளீட்டி தன் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும், அவர்களை உயர்ந்த பணியில் கைநிறைய சம்பளம் வாங்குபவர்களாக, வெளிநாடுகளில் வேலைபார்ப்பவர்களாக ஆக்கவேண்டும் என்பது மட்டுமே இன்றைய குடும்பங்களின் லட்சியமாக உள்ளது. இந்த எண்ணமோ, முயற்சிகளோ தவறில்லை. ஆனால், இதற்கான ஓட்டத்தில் தங்களைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை புறக்கணித்துவிட்டு ஓடுவதுதான் வேதனையாக உள்ளது.

இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் பிள்ளைகளை வரமாகவும், பெற்றோரை சுமையாகவும் கருதுகிறார்கள். தன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு செலுத்தும் கவனத்தில் ஒரு கால்பாகத்தையாவது தன்னைப் பெற்றவர்களுக்கு செலுத்தினால்கூட பரவாயில்லை.

பெரியவர்களை கூடவே வைத்துக்கொண்டால் அவர்களைப் பராமரிப்பது முடியாது என்று கூறி முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடுவதும், பலர் அதைக்கூட செய்யாமல் வீட்டைவிட்டு வெளியே விரட்டிவிடுவதும் உலகம் முழுக்கவே அரங்கேறி வருகிறது.

 

பேராசிரியர் ருக்மணி

அயல்நாடுகளில் மூத்தகுடிமக்களை பராமரிக்க அரசாங்கமே பல்வேறு வசதிகளை இலவசமாக செய்து தருவதை பார்க்க முடிகிறது. நம்நாட்டில் இப்போதுதான் இதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளார்கள் நடைமுறைக்கு எப்போது வருமோ!

ஒரு நாட்டின் மூத்த குடிமக்கள் என்பவர்கள் இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரத்தின் காவலர்கள் என்றால் அது மிகையில்லை. அடுத்த தலைமுறைக்கு நம் பாரம்பரியத்தை சொல்லித்தருபவர்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் தங்களின் அனுபவங்களை செயல்படுத்தி சமூகத்தை காத்துவருபவர்கள். கொரோனா தீநுண்மி காலத்தில்கூட மூத்த குடிமக்கள்தான் பாரம்பரிய மருத்துவமுறைகளை பயன்படுத்தி தங்கள் குடும்பங்களை காத்து வந்தார்கள் என்பதை நாம் கண்டோம். அரசியல், பொருளாதார மேம்பாட்டிலும், சமூக மேம்பாட்டிலும் மூத்தோர்களின் பங்களிப்பை இந்திய ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் மறத்தல் நியாயமாகாது. அதேபோன்று குடும்பத்தை மேம்பாட்டிற்கு கொண்டுவர உழைத்த பெற்றோரின் பங்களிப்பை இன்றைய குடும்பங்கள் மறந்து போவதும் நீதியாகாது.

முதிர்ந்து, தளர்ந்து கவனிப்பாரற்று வேதனைப்படும் மூத்த குடிமக்களின் நிலையை பல்வேறு கோணங்களில் நாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பெற்றோரை பராமரிப்பது அவர்கள் வயிற்றில் பிறந்த ஆண், பெண் இருவரின் தலையாய கடமை என்பதை சட்டபூர்வமாகவே வலியுறுத்துவதும், அக்கடமையில் இருந்து தவறுபவர்களுக்கு தண்டனைகளை வரையறுப்பதும், அரசுகள் தரும் எந்தச் சலுகைகளும் அவர்களுக்கு கிடைக்காது என்பதையும் அரசுகள் அறிவிக்க வேண்டும்.

பெற்றோரை, தாத்தா பாட்டிகளை பராமரிப்பது சந்ததிகளின் கடமை என்பதற்கான சட்டங்களை இயற்றுவதும், அதன்மீதான வழக்குகளை விரைந்து முடித்து மூத்தோரை காக்கும் பணியை அரசு, நீதிமன்றம் உள்ளிட்டவை உறுதிபடுத்தவேண்டும்.

பெண், ஆண் என வேறுபாடே இல்லாமல் வளர்ந்து ஆளானவுடன், பெற்றோர் மூலமாக கிடைத்த கல்வி, வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொண்டு "காதல்" என்ற பெயரில் தனக்கொரு துணையைத் தேடிக்கொண்டு பெற்றோரைப் பற்றிச் சிந்திக்காத ஒரு தலைமுறையும் இன்று வேகமாக வளர்ந்து வருகிறது. அவ்வாறு பெற்றோரை புறக்கணிக்கும் பிள்ளைகள் மீது புகார் அளித்து அவர்களுக்குரிய நீதியைப் பெறலாம் என்பதை அரசுகளும், நீதிமன்றங்களும்தான் முதியோர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.

பிள்ளைகள், சந்ததிகள் இல்லாத மூத்த குடிமக்களை பராமரிக்கும் பொறுப்பை மாநில, ஒன்றிய அரசுகள் ஏற்கவேண்டும். மிகத் தரமான முதியோர் இல்லங்களை அனைத்து ஊர்களிலும் ஏற்படுத்துவதும், அங்கு முதியோர்க்குரிய தரமான உணவுகள், மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்டவை கிடைக்கவும் வழிவகைகள் செய்யவேண்டும்.

முதியோர்களுக்கென்று மட்டுமே அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனைகளை ஊர்தோறும் அமைத்தல் வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு சிகிச்சைகள் வழங்குவதில் 50 சதவீதம் கட்டண சலுகைகளை கட்டாயமாக்க வேண்டும்.

ஏழை முதியோர்கள் உணவருந்த வந்தால் உணவகங்களும் கட்டண சலுகைகளை வழங்க ஏதுவாக அவர்களுக்கு வரிச்சலுகைகள் அளிக்கலாம்.

கிராமங்களில் இன்றும் கூட 70, 75 வயது வரை விவசாயம் பார்த்துக்கொள்ளும் மூத்த குடிமக்கள் வாழ்கிறார்கள். 5 ஆண்டுகளுக்கு முன்புவரை தேசிய வங்கிகளில் தங்கநகைகளின் மீதான விவசாயக்கடன் மிகக் குறைந்த வட்டியில் வழங்கப்பட்டுவந்தது. அதைப்பயன்படுத்தி விவசாயக் கடன் பெற்று வந்தார்கள். ஆனால் அதை ஒன்றிய அரசு நீக்கிவிட்டு வட்டிவிகிதத்தை தற்போது 9.5 சதவீதமென ஆக்கிவிட்டார்கள். உள்ளதும் போனதென்று நொந்துபோய் உள்ளனர் வயதான விவசாயப் பெருமக்கள். மீண்டும் விவசாயத்திற்கான தங்கநகைக் கடன் 4 அல்லது 5 சதவீத வட்டியில் வழங்கவேண்டும். தொடர்வண்டிகளில் மூத்தகுடிமக்களுக்கான கட்டண சலுகையும் பறிக்கப்பட்டு விட்டதால் எப்போதாவது அவர்களை வெளியே அழைத்துச் செல்லும் குடும்பத்தினரும் கட்டணம் கருதி அழைத்துச் செல்வதுமில்லை. தொடர்வண்டிகளில், விமானப் பயணங்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கினால் மூத்த குடிமக்கள் மகிழ்வர்.

மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் நீண்டுவருவதால், இனி வருங்காலத்தில் முதியோர்களின் எண்ணிக்கையும் கூடுமென்று ஐ.நா. கூறிவருகிறது. இன்றைய இளையோர் நாளைய முதியோர் என்பதை கவனத்தில் கொண்டு அனைவரும் கனிவு, கரிசனத்தோடு முதியோர்களை பார்த்துக் கொள்ளவேண்டும். அதுதான் அடுத்தடுத்த தலைமுறைக்கு நாம் கற்றுத்தரும் நம் நன்மைக்கான பாடமுமாகும்.

முதியோர்களுடன் வாழ்வதில் சில குறைபாடுகள், சலிப்பு உள்ளிட்டவை இருக்கத்தான் செய்யும். அவற்றைப் பொருட்படுத்தாமல் சற்று பொறுமையோடு அணுகினால் நாளடைவில் அக்குறைபாடுகளும் காணாமல் போகும். நாம் இந்த உலகிற்கு வர காரணமாய் இருந்தவர்களை இந்த உலகில் அவர்கள் இருக்கும் வரை காப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றிக்கடன் ஆகும். இன்று 1-ந் தேதி உலக முதியோர் தினமாகும்.

Tags:    

Similar News