தீராத நோய்கள் தீர்க்கும் குலசை முத்தாரம்மன்
- எருமைத்தலை பெற்ற வரமுனி மீண்டும் கடுமையான தவங்கள் பல புரிந்து மூன்று உலகங்களையும் ஆளும் வல்லமை பெற்றிருந்தான்.
- தசரா திருவிழாவின்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விதவிதமான வேடங்களை அணிந்து, வீடுகள் தோறும் சென்று தர்மம் எடுப்பதை காணமுடியும்.
உலகின் ஆதார சக்தியாய் விளங்கும் அன்னை பராசக்தி ஒவ்வொரு தலங்களிலும் வெவ்வேறு திருநாமங்களில் அருள் பாலிக்கிறாள். அந்தவகையில் திருச்செந்தூர் அருகில் உள்ள கடற்கரை பட்டினமாகிய குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் எனும் பெயர் கொண்டு கருணை மழை பொழிந்து கொண்டிருக்கிறார் மூவுலகிற்கும் நாயகி.
அம்மையும், அப்பனுமாக காட்சியளிக்கும் அற்புத தெய்வமாம் அன்னை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தசரா பெருந்திருவிழா உலகப் பிரசித்திப் பெற்றது ஆகும்.
இந்தியாவில் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெறும் தசரா பெருந்திருவிழாவுக்கு அடுத்து மிகப்பெரிய அளவில் இங்கு தான் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தசரா பெருந்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக, 10-ம் நாள் திருவிழாவான 24-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு மகிசா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
கொடியேற்ற நாளுக்கு முந்தைய இரவில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரத் தேவதைகளுக்கு காப்பு கட்டப்படும். முதல் நாளில் அம்பாள் துர்க்கை கோலத்தில் காட்சி தருவாள்.
2-ம் நாள் விசுவ கர்மேஸ்வரர் கோலத்திலும், 3-ம் நாள் பார்வதி கோலத்திலும், 4-ம் நாள் பாலசுப்பிரமணியர் கோலத்திலும், 5-ம் நாள் நவநீதகிருஷ்ணர் கோலத்திலும், 6-ம் நாள் மகிஷாசுரமர்த்தினி யாகவும், 7-ம் நாள் ஆனந்த நடராசராகவும், 8-ம் நாள் கஜலட்சுமி கோலத்திலும், 9-வது நாளில் கலைமகள் கோலத்திலும் காட்சியளித்து வீதிஉலா வருகிறாள்.
10-ம் நாள் பிற்பகலில் தசமி திதியில் சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், மகிஷாசுர சம்ஹாரத்திற்காக கொண்டு செல்லப்படும் சூலத்திற்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற பிறகு, மகிஷாசுர மர்த்தினி கோலம் கொண்டு, கடற்கரையில் அமைந்திருக்கும் சிதம்பரே சுவரர் கோவில் வளாகத்தை நோக்கி அம்பாள் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து மகிசாசூரசம்ஹாரம் நடைபெறும்.
மறுநாள் காலை பூஞ்சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அன்னை அருள்புரிவாள். மாலையில் கோவிலை அம்மன் வந்தடைந்த பின்னர் கொடி இறக்கப்படும். தொடர்ந்து, சுவாமி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். இதேபோல் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளை களைந்து விடுவார்கள். 12-ம் நாள் பகலில் முத்தாரம்மனை குளிர்விப்பதற்காக குடம், குடமாக பாலாபிஷேகம் நடத்தப்படும். அத்துடன் தசரா திருவிழா இனிதே நிறைவடையும்.
தசரா திருவிழா தோன்றிய வரலாறு
முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவன் தான் பெற்ற தவத்தின் பயனாக வலிமை மிக்க வனாகி ஆணவத்தால் தன் அறிவுக்கண்ணை இழந்திருந்தான். ஒரு நாள் இவனது இருப்பிடம் வழியாக மகா மகத்துவம் பொருந்திய அகத்திய மாமுனிவர் செல்லும்போது அவரை மதிக்கத் தவறியதுடன் அவமரியாதையும் செய்தான்.
இதனால் அகத்தியர் மனம் நொந்து வரமுனிக்கு எருமைத்தலையும் மனித உடலும் பெற்று அலைவாயாக என்று சாபம் கொடுத்தார். செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கோரிய உடன், சாப விமோசனமாக இறைவியின் கையால் உன் உடல் அழிந்து சாபவிமோசனம் கிடைக்கும் என்றார்.
எருமைத்தலை பெற்ற வரமுனி மீண்டும் கடுமையான தவங்கள் பல புரிந்து மூன்று உலகங்களையும் ஆளும் வல்லமை பெற்றிருந்தான். இதனால் பூமியில் தவம் புரியும் முனிவர்கள் முதல் தேவர்கள் வரை அனைவருக்கும் எல்லையில்லா துன்பம் கொடுத்து வந்தான். வரமுனி முழுமையான அசுரனாக மாறி மகிஷா சூரனாக மூன்று உலகத்திலும் வலம் வந்தான். தேவர்களும் முனிவர்களும் சிவனிடம் சென்று முறையிட, அன்னை பார்வதியை நோக்கி தவம் செய்யுங்கள், உங்களுக்கான தீர்வை அன்னை தருவாள் என்றார் சிவன்.
தேவர்களும் அன்னையை நோக்கி விடாமுயற்சியுடன் கடும்தவம் புரிந்தனர். முனிவர்கள் நடத்திய வேள்விக்கு இடையூறு நேராதபடி அன்னை மாயஅரண் ஒன்றை உருவாக்கி எந்த இடைஞ்சலும் இல்லாமல் வேள்வியை நடத்தும்படி கூறினாள். அவர்கள் நடத்திய வேள்வியில் பெண் குழந்தை ஒன்று தோன்றியது இந்த குழந்தை லலிதாம்பிகை என்று அழைக்கப்பட்டது.
9 நாட்களில் இந்த குழந்தை முழுமையான வளர்ச்சியடைந்து 10-வது நாள் பராசக்தி லலிதாம்பிகை என்ற பெயரில் மகிஷாசூரனை வதம் செய்யப்புறப்பட்டாள். மகிஷாசூரனை அழித்த 10-ம் நாள் தசரா பெரும் திருவிழாவாக இங்கு கொண்டாடப்படுகிறது. அன்னை பராசக்தி வேள்வியில் வளர்ந்த 9 நாட்களும் நவராத்திரி திருவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். முதல் 3 நாட்கள் மலைமகளாகவும், அடுத்து வரும் 3 நாட்கள் அலைமகளாகவும் , இறுதியில் வரும் 3 நாட்கள் கலைமகளாகவும் காட்சி அளிக்கிறாள் அன்னை.
வேடம் அணியும் பக்தர்கள்
தசரா திருவிழாவின்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விதவிதமான வேடங்களை அணிந்து, வீடுகள் தோறும் சென்று தர்மம் எடுப்பதை காணமுடியும். அவர்களுக்கு மக்கள் மனமகிழ்ச்சியுடன் அரிசி, பணம் காணிக்கையாக வழங்குவார்கள். இதற்கு காரண, காரியம் உண்டு. முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம். இந்த ஐதீகத்தின்படி, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டும், நினைத்த காரியும் நிறைவேற வேண்டியும், மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அம்மனே நேரில் வந்து கேட்பதாக கருதி மக்கள் தர்மம் செய்வார்கள்.
பொதுவாக தசரா திருவிழாவையொட்டி வேடமணியும் பக்தர்கள் 61 நாள், 41 நாள், 31 நாள், 21 நாள், 11 நாள் என தங்கள் வசதிக்கேற்ப விரதமிருந்து வேடம் அணிவது வழக்கம்.
முருகன், விநாயகர், ராமன், லட்சுமணன், சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, காளி, அட்டகாளி, கருங்காளி, அனுமன், சுடுகாட்டு காளி, சுடலை மாடன், இசக்கி அம்மன், குறவன், குறத்தி என பல்வேறு வேடங்களை பக்தர்கள் விரும்பி அணிகின்றனர்.
வழிபாடு-பலன்கள்
அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால் அதிக பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இறைவனை தீ வடிவில் வழிபாடு செய்தால் அனைத்து நலன்களையும் பெற்று உயரலாம் என்பதே இதன் தத்துவம். எண்ணெய், மாப்பொடி, நெல்லிப்பொடி, மஞ்சள் பொடி, பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சம் பழச்சாறு, இளநீர், அன்னம், விபூதி, சந்தனம் ஆகியவற்றை வரிசைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கப்பெற்று வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும்.
இதேபோல குலசையில் பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆன்மாவினுள் புகுந்து நம்மை பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் அகங்காரம், ஆணவம், கோபம், மோகம் உள்ளிட்டவைகளை அன்னமாக வேகவைத்து இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வது என்பதே இதன் தத்துவம் ஆகும். இதன் மூலம் தோஷங்கள் நீங்குவதாகவும் நம்பப்படுகிறது.