அமெரிக்க பிரபலங்களை பிரமிக்க வைத்த சுவாமி விவேகானந்தர்!
- அமெரிக்காவில் வாழ்ந்த இங்கர்ஸால் ஒரு பிரபலமான நாத்திகவாதி. அனைவரையும் கவர்ந்து இழுக்கும் சொற்பொழிவாளர்.
- உலகம் நலமுற வேண்டும் என்ற உன்னதமான கருத்தை இந்த மூவரும் கொண்டிருந்ததால் அனைவரது பார்வையும் ஒன்றாகவே இருந்தது.
மகான்களின் பார்வை ஒரு கணம் நம் மீது பட்டாலும் போதும், அவர்கள் நம்முடன் ஓரிரு வார்த்தைகள் பேசினாலும் போதும், நம் வாழ்வே மாறி உயர்நிலையை அடைய வழி வகுக்கும், நமக்கு ஞானம் சித்திக்கும் என்பர்.
இந்தக் கூற்றை நிரூபித்தவர் சுவாமி விவேகானந்தர் ஆவார்.அவர் வாழ்க்கையில் அவரைச் சந்தித்தோர் நூற்றுக் கணக்கானோர். அவரிடம் நேரடித் தொடர்பு கொண்டோரின் வாழ்க்கை கண நேரத்தில் மாறியது; உயர்ந்தது. அப்படிப்பட்டோரில் ஒரு நால்வரைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
நாத்திகவாதி இங்கர்ஸால்
அமெரிக்காவில் வாழ்ந்த இங்கர்ஸால் ஒரு பிரபலமான நாத்திகவாதி. அனைவரையும் கவர்ந்து இழுக்கும் சொற்பொழிவாளர்.
சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் இருந்த போது அவரைச் சந்தித்தார் இங்கர்ஸால். கொள்கையளவில் எதிரும் புதிருமாக இருந்த இருவரும் பலமுறை சந்தித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
சுவாமிஜியைச் சந்தித்த இங்கர்ஸால் தன் கையிலிருந்த ஒரு ஆரஞ்சுப் பழத்தைத் தூக்கிப் போட்டுப் பிடித்தவாறே கூறினார் இப்படி: "இந்த ஆரஞ்சுப் பழத்தின் சாறு முழுவதையும் குடித்து விட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வாழ்க்கை ஒன்று தான் நமக்கு உறுதியாகத் தெரியும். இன்னொன்று உண்டோ இல்லையோ, யார் கண்டது?"
இதைக் கேட்ட விவேகானந்தர் அவர் லோகாயதவாதத்தை மனதில் கொண்டு உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க விரும்புவதைத் தெரிந்து கொண்டு உடனடியாக பதில் தந்தார் இப்படி:
"ஆரஞ்சுப் பழத்தின் சாறு முழுவதையும் குடிப்பதில் தப்பே இல்லை. கடைசிச் சாறு வரை குடிப்பது எனக்கு உடன்பாடு தான். ஆனால் அதற்கான உங்கள் வழியை விட இன்னும் சிறந்ததான வழி எனக்குத் தெரியும்"
அத்தோடு தொடர்ந்தார் : "எனக்கு மரணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். அதனால் அந்தச் சாறைக் குடிக்க நான் அவசரப்படுவதில்லை. இறந்து விடுவேனோ என்ற பயம் எனக்கு இல்லை. ஆகவே நிதானமாகச் சாறு பிழிகிறேன். மனிதனைக் கடவுளாக நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அப்போது இந்த வழியில் ஆரஞ்சைப் பிழிந்து பாருங்கள். நீங்கள் பிழிவதை விட லட்சம் மடங்கு கூடுதலாக உங்களுக்குச் சாறு கிடைக்கும்" என்றார். இங்கர்சால் பிரமித்தார்.
ச.நாகராஜன்
"உங்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். சில காலம் முன்பு இங்கு வந்திருந்து இப்படிச் சொல்லி இருந்தீர்கள் என்றால் உங்களைத் தூக்கில் தொங்க விட்டிருப்பார்கள்" என்ற இங்கர்ஸால் விவேகானந்தரைப் பற்றி அக்கறையும் கவலையும் கொண்டார்.
இங்கர்ஸாலிடம் உபநிடதங்களை விவரித்தார் விவேகானந்தர். வேதாந்தம் மூலம் அனைத்தையும் நன்கு அறிந்து வாழ்க்கை மர்மத்தை நன்கு புரிந்து கொண்டு சுவைக்க முடியும் என்பதை அறிந்து கொண்ட இங்கர்ஸால், இது தான் வழி என்றால் இது எனக்குப் பிடிக்கிறது என்றார்
கோடீஸ்வரர் ராக்பெல்லர்
சிகாகோவில் சுவாமிஜியைச் சந்தித்த இன்னொரு பிரபலமானவர் கோடீஸ்வரர் ஜான் டி. ராக்பெல்லர். ராக்பெல்லரின் நண்பர் ஒருவர் வீட்டில் விவேகானந்தர் தங்கி இருந்த போது அவரைச் சந்தித்தார் ராக்பெல்லர்.
கதவைத் திறந்த வேலையாளைத் தள்ளி விட்டு முன் அனுமதி கூடப் பெறாமல் வேகமாக விவேகானந்தர் இருந்த அறையில் நுழைந்தார் அவர்.
அப்போது விவேகானந்தர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். வந்தவர் யாரென்று அவர் பார்க்கவில்லை. சிறிது நேரம் கழிந்தது. தலையைத் தூக்காமலேயே ராக்ஃபெல்லரின் வாழ்க்கையில் அவர் மட்டுமே அறிந்திருந்த நிகழ்ச்சிகள் பலவற்றைக் கூறிய விவேகானந்தர் கடைசியாக, " நீங்கள் சேர்த்துள்ள சொத்தானது உண்மையில் உங்களுடையது அல்ல. உலகிற்கு நன்மை செய்வதற்காகவே அதை கடவுள் உங்களிடம் ஒப்படைத்திருக்கிறார். ஆகவே அந்தப் பணத்தால் உலகிற்கு நன்மை செய்யுங்கள்" என்றார்.
ராக்பெல்லர் திகைத்தார். தான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல இவர் யார் என்று நினைத்தவர் வெளியேறினார். ஆனால் விவேகானந்தரின் சொற்கள் அவரைச் சுற்றிச் சுற்றி வந்தன.
ஒரு வாரம் கழித்து ஒரு பொதுத் தொண்டு நிறுவனத்திற்கு பெரிய தொகை ஒன்றை நன்கொடையாக அளிக்க அவர் முடிவு செய்தார்.அதைப் பற்றிய விவரங்களை எழுதிய அவர் முன்பு போலவே விரைவாக விவேகானந்தர் இருந்த அறைக்குள் திடீரென்று நுழைந்தார்.
தான் எழுதிய பேப்பரை அவரிடம் தந்து, "இதோ இதைப் படித்துப் பாருங்கள். நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டியதிருக்கும்" என்றார்.
விவேகானந்தர் முன்பு போலவே தலை நிமிராமல் அதை வாங்கிப் படித்தார். பின்னர், "நன்றி சொல்ல வேண்டியது நான் அல்ல; நீங்கள் தான் சொல்ல வேண்டும்" என்றார்.
ராக்பெல்லர் முதன் முதலாக அளித்த பெரிய நன்கொடை தொகை அது தான்!அன்றிலிருந்து ராக்பெல்லர் பவுண்டேஷன் பெரிதாக வளர்ந்தது.உலகின் போற்றத்தக்க சிறந்த கொடையாளி ஆனார் அவர்.
விஞ்ஞானி டெஸ்லா
1895-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து நவம்பர் மாதம் 27-ந் தேதி நியூயார்க் நகருக்குக் கிளம்பினார் விவேகானந்தர். அங்கு வியத்தகு பிரபல மேதைகள் மூவரின் சந்திப்பு நிகழ்ந்தது.
பெரும் விஞ்ஞானியான டெஸ்லா, பிரபல கலையுலக மேதையான பிரெஞ்சு நடிகை மேடம் சாரா பெர்ன்ஹர்ட், சுவாமி விவேகானந்தர் ஆகிய மூவரும் ஒரு நாள் சந்தித்தனர். அறிவியல் உலகில் ஆதிக்கத்தைச் செலுத்தியவர் டெஸ்லா. புலன் சார்ந்த கலை உலகில் தன் பெருமையை நிலை நாட்டியவர் நடிகையான பெர்ன்ஹர்ட். இவை இரண்டும் கடந்த ஆன்மீக உலகின் சிகரத்தில் ஏறி அமர்ந்தவர் விவேகானந்தர்.
நடிகை பெர்ன்ஹர்ட் நடித்த புத்தரின் வாழ்க்கை பற்றிய இஸில் என்ற நாடகத்தைப் பார்க்கச் சென்றார் விவேகானந்தர். இஸில் என்ற பெண்மணியாக நடித்த பெர்ன்ஹர்ட் அவருடன் பேசப் பெரிதும் விரும்பி வந்தார். அப்போது அங்கு டெஸ்லாவும் இருந்தார்.
டெஸ்லா விவேகானந்தர் கூறிய கல்பங்கள், பிராணன், ஆகாயம் பற்றிய விவரங்களைக் கூர்ந்து கேட்டு மகிழ்ந்தார். டெஸ்லாவின் அறிவியல் பூர்வமான கருத்துக்கள் வேதாந்த கருத்துக்களுடன் ஒத்து இருந்ததால் அனைவரும் மகிழ்ந்தனர்.
உலகம் நலமுற வேண்டும் என்ற உன்னதமான கருத்தை இந்த மூவரும் கொண்டிருந்ததால் அனைவரது பார்வையும் ஒன்றாகவே இருந்தது.
டெஸ்லா தனது மின்சாரம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த போது அவரது கண்டுபிடிப்பால் பெரிய கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.அழிவைச் செய்யும் அந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி எவரிடமும் கூற அவர் மறுத்து விட்டார். அது அவருடனேயே மறைந்தது. டெஸ்லா வேதாந்தம் கலந்த ஒரு விஞ்ஞானி!
பாடகி எம்மா கால்வே
1900-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ம் நாள் நியூயார்க்கிலிருந்து கிளம்பிய விவேகானந்தர் பாரிசை அடைந்தார். அங்கு ஒரு பிரம்மாண்டமான உலகக் கண்காட்சி ஏற்பாடாகி இருந்தது. அதற்குப் பலமுறை சென்றார் அவர். அப்போது பாரிசில் பிரபல ஒபேரா பாடகியான எம்மா கால்வே விவேகானந்தரைச் சந்தித்தார். ஒரு நாள் அவர் பாடிய இசை நிகழ்ச்சிக்கு விவேகானந்தர் விஜயம் செய்தார். அந்த நிகழ்ச்சி தான் எம்மா கால்வேயை உலகப் புகழ் பெற்ற பாடகி ஆக்கியது.
ஆனால் கால்வேயின் வாழ்க்கை மிக சோகமயமான ஒன்று. அவர் பாடிக் கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சியின் போது, அவரது ஒரே மகள் தீக்கு இரையாகி மாண்ட செய்தியை நடுவில் கேட்டு அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
அவரால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. பலமுறை தற்கொலைக்கு முயன்றார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரது நெருங்கிய தோழி வீட்டிற்கே சென்றார். அங்கு தான் விவேகானந்தர் தங்கி இருந்தார்.
அவருக்கு ஆறுதல் அளித்த விவேகானந்தர் அவரது வாழ்க்கையில் அவர் மட்டுமே அறிந்திருந்த நிகழ்ச்சிகளை வரிசையாகக் கூறினார்.
பிரமித்துப் போன கால்வே, "இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்" என்று கேட்ட போது, "ஒரு திறந்த புத்தகத்தைப் படிப்பது போல உன்னைப் படிக்கிறேன்" என்று கூறிய விவேகானந்தர், "அனைத்தையும் மறந்து விடு. உற்சாகமாக இரு. மகிழ்ச்சியுடன் இரு உன் பணியைத் தொடர்." என்றார்.
இந்தச் சந்திப்பால் உத்வேகம் பெற்ற கால்வே கலைத்துறையில் தன் கவனத்தைச் செலுத்தலானார். பெரும் புகழையும் பெற்றார்.
இதே போல ஏராளமான விஞ்ஞானிகளும், அறிஞர்களும், இதர துறை விற்பன்னர்களும் சுவாமி விவேகானந்தரைச் சந்தித்தனர்.அவரிடமிருந்து உத்வேகம் பெற்று தம் தம் துறையில் சிறந்து விளங்க ஆரம்பித்தனர்.
12-1-1863 அன்று அவதரித்த சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவையே ஆட்கொண்டார். அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை நான்காம் தேதியையே தனது சமாதி அடைவதற்கான தினமாகவும் தேர்ந்தெடுத்தார்.
அவர் சமாதி எய்திய தினம் 4-7-1902 அவர் ஒரு முறை கூறினார் : "இந்தியாவின் திரண்ட வடிவமே நான்!" என்று.
இந்தியா உலகிற்கு என்னவெல்லாம் அளிக்க முடியும் என்பதை அவர் தனது வாழ்வின் மூலம் காண்பித்தார்.
ரவீந்திரநாத் தாகூர், "இந்தியாவை அறிய வேண்டுமெனில் சுவாமி விவேகானந்தரைப் படியுங்கள்" என்றார்.
இந்தியாவின் திரண்ட வடிவத்திற்கு நமது உள்ளார்ந்த வணக்கங்களைச் சமர்ப்பித்து அவர் காட்டிய வழியில் முன்னேறுவோம்!
தொடர்புக்கு:- snagarajans@yahoo.com