சிறப்புக் கட்டுரைகள்

வயோதிகத்தில் வயிற்றுப் புண்ணும், தீர்வுகளும்

Published On 2023-11-08 10:06 GMT   |   Update On 2023-11-08 10:06 GMT
  • உணவு முறை மாற்றங்களும், வாழ்வியல் நெறிமுறைகளும் குடல் புண் உண்டாக முக்கிய காரணமாக உள்ளன.
  • மதுப்பழக்கமும், புகையும் குடல் உறுப்புகளின் சளி சவ்வினை சிதைத்து குடல் புண்ணை உண்டாக்குவதாக உள்ளன.

முதுமையில் மிகப்பெரும் சவாலாக இருக்கும் நோய்நிலைகளுள் ஒன்று 'குடற்புண்`. ஏனெனில் முதுமையில் 3 முதல் 10 சதவீத்ம வரை இறப்புகள் குடல் புண்ணால் உண்டாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் குடல்புண் நோய்நிலையானது மீண்டும் மீண்டும் வந்து பல்வேறு தொந்தரவுகளை தரக்கூடியதாக இருப்பது கூடுதல் வருத்தம் தான்.

'பெப்டிக் அல்சர்' எனப்படும் 'குடல் புண்' நோய்நிலையானது, பெரும்பாலும் இரைப்பையில் அல்லது முன்சிறுகுடலில் அதிகம் ஏற்படுவதாக உள்ளது. உணவுக்குழாயின் அடிப்பகுதி இரைப்பை அமிலத்துடன் தொடர்புடையதால் சிலருக்கு அப்பகுதியில் ஏற்படக்கூடும். குடலின் சளிச்சவ்வு சிதைத்து அங்குள்ள திசுக்கள் சிதைவதால் இத்தகைய புண் உண்டாகின்றது. பலருக்கு குறிகுணம் இல்லாமலே குடற்புண் உண்டாகி திடீரென பல்வேறு பின்விளைவுகளை உண்டாக்ககூடும்.

உணவு முறை மாற்றங்களும், வாழ்வியல் நெறிமுறைகளும் குடல் புண் உண்டாக முக்கிய காரணமாக உள்ளன. எச்.பைலோரி எனும் கிருமியால் இரைப்பை புண் ஏற்படுவதாகவும் நவீன அறிவியல் கூறுகின்றது. தூக்கம் தடைபடுவதாலும், மனச்சிக்கலாலும், மலச்சிக்கலாலும் கூட குன்ம நோய் (குடல் புண்) உண்டாகும் என்கிறது சித்த மருத்துவம். மதுப்பழக்கமும், புகையும் குடல் உறுப்புகளின் சளி சவ்வினை சிதைத்து குடல் புண்ணை உண்டாக்குவதாக உள்ளன.

குடல் புண்ணை உண்டாக்குவதில் அதிகப்படியான இரைப்பை அமில சுரப்பும், அதிகப்படியான பித்தநீர் சுரப்பும் காரணமாக உள்ளன. அத்துடன் முதுமையில் எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணி மாத்திரைகளும், இதய நோயாளிகள் அவசியமாக எடுத்துக்கொள்ளும் ஆஸ்பிரின் மாத்திரைகளின் தொடர் பயன்பாடும் சிறுகுடலில் புண்ணை உண்டாக்க கூடும். ஆகவே மருத்துவர் ஆலோசனைப்படி நோய்க்காரணத்தை நாடி, மருந்துகளை நாடுவது நல்லது.

சித்த மருத்துவத்தில் குடல் சார்ந்த புண் 'குன்மம்' என்று குறிப்பிடப்பட்டு எட்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. "தொடர் வாத பந்தமலாது குன்மம் வராது" என்கிறது சித்த மருத்துவப் பாடல் வரிகள். அதாவது குடலில் சேரும் அதிகப்படியான வாயுவின் மாறுபாட்டால், குடல்புண் உண்டாவதாக அறியப்படுகின்றது. ஆக வாதக் குற்றத்தை நல்லநிலையில் வைக்கும் உணவும், மருந்தும் குடல்புண்ணைத் தடுக்கவும், தீர்க்கவும் எளிய வழிமுறை. சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள அதிமதுரம், திரிபலை, கடுக்காய், வல்லாரை, சோற்றுக்கற்றாழை, வில்வம், மாதுளை போன்ற மூலிகைகளும், ஏலக்காய், சீரகம், சோம்பு, வெந்தயம், பெருங்காயம், மஞ்சள், கசகசா ஆகிய அஞ்சறைப்பெட்டி கடைசரக்குகளும் குடற்புண் நோய்நிலையில் நல்ல பலன் தருவதாக உள்ளன.

குடல் புண்ணிற்காக அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகை அதிமதுரம். அதிக இனிப்பு சுவை உடையது. இதில் உள்ள 'கார்பனாக்சலோன்' வேதிப்பொருட்கள் குடல் புண்ணை ஆற்றுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள 'அதிமதுர சூரணம்' எனும் மருந்தை பயன்படுத்துவதும் நற்பலன் தரும்.


சோற்றுக்கற்றாழையை மடல் நீக்கி பயன்படுத்த குடல்புண்ணை ஆற்றுவதில் நற்பலன் தரும். இதற்கு அதிகரித்த பித்தத்தைக் குறைக்கும் செய்கை உண்டு. சோற்றுக்கற்றாழை உள்ளிருக்கும் ஜெல் போன்ற பகுதியை நீரில் அலசி, பாலுடன் சேர்த்து சாறாக்கி குடித்து வர புண்ணை ஆற்றும்.

கடுக்காயில் உள்ள 'சிபுளினிக் அமிலம்' எனும் வேதிப்பொருள் குடல்புண்ணை ஆற்ற உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது சிறப்பு. அதே போல் திரிபலை சூரணம் எனும் சித்த மருந்துடன் நெய் சேர்த்து எடுத்துக்கொள்ள குடல் புண் நோய்நிலையில் நல்ல பலன் கிடைக்கும். குடல்புண் என்றதுமே காலம் காலமாக வீட்டு வைத்தியமாக புழக்கத்தில் உள்ள சித்த மருத்துவ மூலிகை 'மணத்தக்காளி' தான். மனதிற்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய கீரை வகை இது. இதனை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள மன அழுத்தம் போக்கி குடல் புண்ணையும் ஆற்றும். சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள ஏலாதி சூரணம், வில்வ பழ மணப்பாகு, மாதுளை மணப்பாகு, வில்வ பழ லேகியம் ஆகிய எளிய மருந்துகள் குடல்புண் நோய்நிலையில் நல்ல பலன் தரக்கூடும். இவை பித்தத்தைக் குறைத்து குடலையும், உடலையும் நலப்படுத்தும்.

அதே போல் எளிய கடைசரக்குகளாகிய ஓமம், கசகசா இவற்றை சம எடை எடுத்து பொடித்து அதற்கு சமஎடை பனைவெல்லம் சேர்த்து லேகியம் போல அரைத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள குன்ம நோய்நிலையில் நல்ல பலன் தரும். அதனால் உண்டாகும் வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி இவையும் நீங்கும். சித்த மருத்துவத்தில் முட்டை வெண்கருவைக் கொண்டு செய்யப்படும் 'அண்ட லேகியம்' எனும் மருந்தும் குடல்புண்ணை ஆற்றுவதில் சாலச்சிறந்தது.

எளிய அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கு களாகிய ஏலக்காய், சீரகம், கசகசா இவற்றை சம எடை எடுத்து பொடித்து சூரணமாக்கி அவ்வப்போது பாலில் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள வயிற்றுப்புண்ணுக்கு நல்ல பலனளிக்கும். சீரகத்தை பொடித்து வெண்ணெயில் கலந்து எடுத்துக்கொள்ள குன்மம் தீரும் என்கிறது சித்த மருத்துவம். பெருங்காய சூரணம் எனும் மருந்தும் வாதம் (வாயு) சார்ந்த குன்ம நோயில் நற்பலன் தரும்.

தமிழர்களின் பாரம்பரியத்துடனும், ஆன்மீகத்துடனும் பயணித்து வரும் 'மஞ்சள்' எனும் கடைச்சரக்கு குடல்புண்ணை ஆற்றுவதோடு, குடல் புற்று வரை வராமல் தடுக்கும் தன்மையும் உடையது. அவ்வப்போது மஞ்சளை பாலில் சேர்த்து எடுப்பது குடலுக்கு நல்லது.

அதில் உள்ள 'குர்குமின்' எனும் இயற்கை வேதி நிறமி பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது. இது காக்ஸ் நொதிகளை தடுப்பதன் மூலமும், புண்களை உண்டாக்கும் காரணிகளான இன்டெர்லுகின், டி.என்.எப் இவற்றை தடுத்து அழற்சியை சரிசெய்யும் தன்மையையும் உடையது.

குடல்புண் நோய்நிலையில் உணவு முறை மாற்றங்கள் மிகப்பெரிய அளவில் குறிகுணத்தைக் குறைக்க உதவும். நேரம் தவறி எடுக்கும் உணவும், நேரத்திற்கு எடுக்கும் தவறான உணவு வகைகளும் குடல்புண்ணை அதிகரிப்பதாக உள்ளன.

காலையில் எழுந்ததும் தேநீர் அல்லது காபி குடிப்பது முதுமையில் பலர் வாடிக்கையாக உள்ளது. தினசரி 2 அல்லது 3 முறைக்கு மேலாக தேநீர் எடுப்பதையும் விரும்புகின்றனர். தேநீர் எடுத்துக்கொள்வது இரைப்பை சுரப்பை அதிகப்படுத்துவதால், இரைப்பை மற்றும் குடல்புண் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.



காபியை பற்றி பல்வேறு ஆய்வுகள் பல்வேறு முடிவுகளை கூறுகின்றன. எனவே குடல்புண் உள்ளவர்கள் காபியை குறைப்பது அல்லது தவிர்ப்பது நல்லது. மாற்றாக பாலில் ஏலக்காய் சேர்த்து எடுத்துக்கொள்ள குடல் புண் ஆறக்கூடும். ஏலக்காயில் உள்ள இயற்கை வேதிப்பொருட்கள் 70 சதவீதம் வரை குடல்புண்ணை ஆற்றுவதாக எலிகளில் நடத்திய சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

தேநீர், காபியைப் போல் புளிப்பான உணவுகள் வயிற்றில் அமில சுரப்பினை தூண்டி புண்ணை அதிகரிக்கும் தன்மை உடையது என்பதால் புளிப்பு பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றையும், புளிப்பு ரசம், மாமிச சூப் வகைகளையும் வயிற்றுப்புண் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

சுக்கு, மிளகு, திப்பிலி போன்ற கடுகாரமுள்ள அஞ்சறைப்பெட்டி சரக்குகளை தவிர்ப்பதும் நல்லது. உண்ணும் உணவில் முதல் பிடி சோற்றில் உருக்கிய நெய்யிட்டு பிசைந்து உண்பதற்கு 'அன்ன சுத்தி' என்று பெயர். குடல்புண் உள்ளவர்கள், இதே போல் நெய் உணவில் சேர்த்துக்கொள்வது வாதம் மற்றும் பித்தத்தைக் குறைத்து நோய்நிலையில் நல்ல பலன் தரும்.

பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில், இந்தியாவிற்குள் நுழைந்த மிளகாய் நமது பாரம்பரிய மருத்துவ மூலிகையான மிளகினை இடமாற்றம் செய்துவிட்டது. இன்று அதிகம் பயன்படுத்தும் மிளகாய் குன்மத்தையும், மூல வியாதியையும் உண்டாக்கும் என்கிறது சித்த மருத்துவம்.

மிளகாயில் உள்ள 'கேப்சைசின்' எனும் வேதிப்பொருள் இரைப்பை மற்றும் குடல் சளிச்சவ்வினை சிதைத்து குடல்புண்ணை உண்டாக்குவதாக நவீன அறிவியலும் கூறுகின்றது. ஆக முதுமையில் மட்டுமல்லாது எல்லா பருவத்திலும் குடல்புண்ணை தடுக்கவும், தீர்க்கவும் மிளகாயை ஓரங்கட்டுவது நல்லது.

முதுமையில் உடல் உறுப்புக்கள் செயல்பாடு குறைவதால் சீரணமும் இயல்பாகவே குறையும். ஆக, சீரணத்தை மேம்படுத்த 'வஜ்ராசனம்' எனும் யோகாசன இருக்கை நிலையை, உணவு உண்ட பின் மேற்கொள்வது சிறந்த பலன் தரும்.

இந்த அவசர உலகத்தில், உணவை நன்றாகமென்று விழுங்க கூட நேரமின்றி, அப்படியே விழுங்குவதால் சேதாரம் குடலுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தான். குறிப்பாக வாழை இலையில் உண்ணும் பழக்கம் எப்போது மறந்து போனதோ, அப்போது குடல்புண் போன்ற நோய்கள் தலைவிரித்தாட துவங்கிவிட்டன. முக்கியமாக நெகிழி (பிளாஸ்டிக்) தட்டில் உணவு உண்பது பிற்காலத்தில் தீராத நோய்நிலைகளை உண்டாக்ககூடும். குடல்புண் நாட்பட்ட நிலையில் குடல் சவ்வில் துளை, அதில் ரத்தம் வடிதல், ரத்த வாந்தி, மலம் கறுப்பு நிறமாக வெளியேறுதல், பின்னாளில் கொடிய புற்றுநோய் போன்ற அடுக்கடுக்கான பல்வேறு உடல் உபாதைகளை உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும். எனவே முதுமையில் குடல்புண்ணுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்வது, ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். ஆயுட்காலத்தைக் கூட்டும்.

நோய்களை அவற்றின் துவக்க நிலையிலேயே வேருடன் பிடுங்கி எறிய வேண்டும். இல்லாவிடில் மரமாய் வளர்ந்து, ஆரோக்கியத்தின் ஆணி வேரை அடியுடன் சாய்த்து, இறப்புக்கு வழிகோலும். எனவே முதுமையை கொண்டாட விரும்பினால், உணவை மருந்தாக்கி, விருந்தை துறந்து, ஆரோக்கிய கண் திறந்து, நடைபோடுவது நல்லது.

தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

Tags:    

Similar News